தமிழகம்

புகார் அளித்த எங்களையே கைது செய்தார்: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது தொடரும் புகார்கள்

சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில்  டிஜிபி அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்த அதிகாரிகள் 23 பேர், பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிராக டிஜிபியிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து. சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சக்திவேல் தனது ஆயிரக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள சிலையை விற்க முயன்றபோது அதை தொன்மைவாய்ந்த சிலை எனக்கூறி வழக்குப்போட்டு சிறையில் அடைத்தனர் என டிஜிபியிடம் புகார் அளித்தார், உடன் சிலையின் உரிமையாளர் தீனதயாளனும் டிஜிபி அலுவலகம் வந்து, பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக புகார் மனு கொடுத்தனர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தென்னரசு தலைமையில் வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

 பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அடிப்படை ஆதாரம்கூட இல்லாமல் பொன்.மாணிக்கவேல் கைது செய்து இருக்கிறார். அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட்டு கைது செய்த பின்னர் அந்த வழக்கில் பொன்.மாணிக்கவேல் எடுத்த நடவடிக்கை என்ன? ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? காஞ்சிபுரம் மற்றும் பழனி கோவில்களில் சிலைக்கடத்தல் சம்பவமே நடக்காதபோது, அங்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிய காரணம் என்ன?, உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்டு, எங்களை கைது செய்து குற்றவாளியாக்கப் பார்க்கிறார் பொன்.மாணிக்கவேல்.

எங்கள் துறை குறித்து அவதூறான தகவல்களை ஊடகங்களிடம் பொன் மாணிக்கவேல் பரப்புகிறார். குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகளை மீட்டு வந்ததாக கூறி, பெரும் புகழ் அடைந்தார் பொன்.மாணிக்கவேல். உண்மையில் அவர் மீட்டு வந்தது ராஜராஜ சோழன் சிலை தானா? என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

குஜராத் அருங்காட்சியகத்தின் உரிமையாளர், அந்த சிலைகளை எங்கிருந்து விலை கொடுத்து வாங்கினேன் என அனைத்து ஆதாரங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதற்கு நீதிமன்றம் பதில் அளிக்ககோரி பல மாதங்கள் கடந்த பின்னரும் பொன்.மாணிக்கவேல் ஏன் பதில் அளிக்காமல் இருக்கிறார்?

 15 ஆண்டுகளுக்கு முன்பே திமுக ஆட்சிக்காலத்தில் குஜராத் அருங்காட்சியகத்தில் ராஜராஜ சோழன் சிலை இருப்பதாக தகவல் தெரிந்து, அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆட்சியர் இறையன்பு, தொல்லியல் துறை நிபுணர் நாகல்சாமி ஆகியோர் குஜராத் சென்று அந்த சிலையை ஆய்வு செய்து, அது தஞ்சை பெரியகோவிலின் ராஜரஜசோழன் சிலை இல்லை என்று திரும்பி வந்தனர்.

1959-ம் ஆண்டுதான் இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னரே கோவில்களில் உள்ள சிலைகள் குறித்து ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு முன்பே காணாமல் போன சிலைகள் குறித்து இப்போது இருக்கும் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் என்ன கூறமுடியும்?

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஆனால், பொய்யான வழக்குகளில் எங்களை கைது செய்வதிலேயே பொன்.மாணிக்கவேல் குறியாக இருக்கிறார். புகார் அளித்தவர்களையே கைது செய்த சம்பவமும் நடந்தது.” என்றார்.

அவர்கள் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் பெயர்கள், அவர்கள் பணியாற்றிய ஆண்டு, அவர்கள் பணியாற்றாத ஆண்டுக்காக கைது செய்யப்பட்டவிபரம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா? போன்ற விபரங்களை இணைத்து டிஜிபியிடம் அளித்தனர். அதை ஊடகங்களுக்கும் அளித்தனர். புகார் மனுவில் இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் 10 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button