மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமின் கிடையாது : உயர் நீதிமன்றம் அதிரடி
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமின் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 40 பேரின் முன்ஜாமின் மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ், முன்ஜாமின் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
நாட்டையே ஊரடங்கு முடக்கி போட்டிருந்தாலும் மணல் கடத்தல்காரர்களை மட்டும் பாதிக்கவில்லை என தெரிவித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்தார். கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபராதம் விதித்து முன்ஜாமீன் வழங்கிய போதும், நீதிமன்றத்திற்கு வரும் முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்ஜாமின் வழங்கப்படும்போது விதிக்கப்படும் அபராதங்களை தொழில் செலவாகவே அவர்கள் கருதத் தொடங்கி விட்டதாகவும் என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பேணிக் காக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மணல் கடத்தல் வழக்குகளில் உயர்நீதிமன்றம் இனி முன் ஜாமீன் வழங்காது என்ற அவர் 40 மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.