விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றுச்சுவரை இடித்தாரா தாசில்தார்..?
சிவகங்கை மாவட்டம் மறவமங்களம் அருகே உள்ளது நந்தனூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 25 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சித்திரழகு என்பவர் வீட்டின் முன்பு கட்டப்பட்ட சுற்றுச்சுவரை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காளையார்கோவில் வட்டாட்சியர் விடுமுறை நாளில் இயந்திரங்கள் மூலம் இடித்து விட்டதாக சித்திரழகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்… காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அரசு விடுமுறை நாளில் நந்தனூர் கிராமத்திற்குள் வந்து சித்திரழகு என்பவர் வீட்டின் சுற்றுச்சுவரை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினார். அப்போது அக்கம் பக்கத்தினர் வட்டாட்சியரிடம் கேட்டபோது இவர் சுற்றுச்சுவர் கட்டியுள்ள இடத்திற்குள் அரசு புறம்போக்கு இடமும் இருக்கிறது, அதனால் தான் இடிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டதும் காரணம் கேட்டவர்களும் அங்கிருந்து நகர்ந்து விட்டனர். ஏனெனில் இந்த ஊரில் முக்கால் வாசிப்பேர் அரசு புறம்போக்கு நிலங்களை காலங்காலமாக அனுபவித்து வருகிறார்கள். நாம் கேள்வி கேட்டால் நமக்கு பிரச்சினை வரும் என்பதால் யாரும் வட்டாட்சியரிடம் எதுவும் கேட்காமல் நகர்ந்து விட்டனர்.
இந்நிலையில் தான் சித்திரழகு குடும்பத்துடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சித்திரழகு பேசுகையில்… என் வீட்டின் முன்பு சுமார் 40- ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கொட்டம் இருந்தது. இந்த இடம் எங்கள் குடும்பத்தினர்கள் தொடர்ந்து அனுபவித்து வந்த இடமாகும். இந்த இடத்தில்தான் காம்பவுண்டு சுவர் இருந்தது. இந்த இடத்தை நாங்கள் அனுபவித்து வந்ததற்கு தொடர்ந்து அரசுக்கு வரி செலுத்துகிறோம். காம்பவுண்டு சுவர் பகுதி அமைக்கப்பட்ட இடம் முழுவதும் புறம்போக்கு இல்லை. பட்டா இடமும் அதில் இருக்கிறது.
இந்நிலையில் எந்த தகவலும் கொடுக்காமல் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் இங்கு வந்து காம்பவுண்டு சுவரை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இடிக்கும்போது உள்ளே இருந்த 3 ஆயிரம் ஓடுகள், 150-ஹாலோ பிளாக் கற்கள், கல்லுக்கால் வேலி, சமையல் அடுப்புகள் ஆகியவற்றையும் இடித்துத் தள்ளி, உடைத்து அவற்றை அள்ளிக் கொண்டுபோய் அருகில் இருக்கும் நீர்நிலை கண்மாய்க்குள் கொட்டியுள்ளனர்.
என் வீட்டின் கிழக்குப் பகுதியில் குடியிருக்கும் முனியாண்டி என்பவர் புறம்போக்கு இடத்தில் தான் பாதை அமைத்து இருக்கிறார். ஆனால் இவர் என் வீட்டின் முன் பகுதியில் இருக்கும் புறம்போக்கு இடத்தில் நான் நடக்கக் கூடாது என்கிறார் . இவரின் தூண்டுதலின் பேரில்தான் தலையாரி முத்துராமன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு இந்த காரியத்தை முடித்து இருக்கிறார். என் ஊரில் பெரும்பாலானவர்கள் புறம்போக்கு இடத்தை அனுபவித்து வரும் போது .என் வீட்டின் சுவரை மட்டும் குறி வைத்து இடித்துத் தள்ளியது ஏன்? மனம் விட்டு சொல்லுகிறேன் எல்லாம் பணம் தான் சார்! இந்தப் பாடுபடுத்துகிறது என்று சொன்னபடி கண்ணீர் விட்டார்.
ஆனால் தாசில்தார் பாலகிருஷ்ணன் காளையார் கோவிலுக்கு வந்ததிலிருந்து அவர்மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சோமநாதமங்களம் குரூப் சர்வே எண் 39/ 5 கிறீ, மற்றும் 39/8கிறீ இரண்டையும் தாசில்தார் கிளப் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் வருவாய் துறையில் கிளப் செய்யும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு தான் இருக்கிறது. இவர் காளையார்கோவிலுக்கு தாசில்தாராக வந்த பின்பு சுமார் 300 க்கும் மேல் உட்பிரிவு பட்டா மாறுதல்களை அனுமதி என கணினியில் பதிவு செய்து அதை அப்பவே தள்ளுபடியும் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இளையான்குடி தாலுகா நெஞ்சத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த டிரைவர் மகேஸ்வரா என்ற இளைஞர் மீது தாசில்தார் காரை விட்டு மோதி நிறுத்தாமல் சென்றதில் இவர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது. எனவே இவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நிர்வாக அளவில் என்னென்ன குளறுபடிகள் செய்திருக்கிறார் என்று விசாரிக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதியினர்.