தமிழகம்

அதிகாரிகளின் அலட்சியம்.. : கொரோனா சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மாயமான முதியவர்…

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட முதியவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற மருத்துவ குழுவினர், மருத்துவமனை வளாகத்திலேயே இறக்கிவிட்டு சென்றதால் மாயமான அவரை, ஒரு மாதத்திற்கும் மேலாக அவரது குடும்பத்தினர் தேடி வருகின்றனர்.

சென்னை ஆலந்தூரில் வசித்த 74 வயதான ஆதிகேசவன் தான் மாயமானவர். தனது 103 வயதான தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றவருக்கு அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் 11ம் தேதி 162 வார்டு மாநகராட்சி ஊழியர்கள் இவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டு தனிமையில் இருந்த குடும்பத்தினர், செல்போன் பயன்படுத்தாத முதியவர் ஆதிகேசவனை தொடர்பு கொள்ள முடியாததால் எந்த மருத்துவமனையில் இருக்கிறார் என தெரிந்து கொள்ள முடியவில்லை. ஓரிரு நாட்களில் அவரது மகன்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்ததில் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆலந்தூர் மண்டல அதிகாரிகளோ, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி அனுப்பிவிட்டனர். மருத்துவமனையில் அப்படி யாரும் இங்கு அனுமதிக்கப்படவில்லை என மறுத்ததால் அவரது குடும்பத்தினர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் மணிவண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆள்மாயம் என்ற பிரிவில் வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் அவரது மற்றொரு மகன் துளசிதாஸ், தனது தந்தையை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு கடந்த வாரம், நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவமனையிலிருந்து ஆதிகேசவன் வெளியேறிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைகேட்ட நீதிபதிகள், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியதும், உரிய சிகிச்சை அளிக்க வேண்டியதும் அரசு அதிகாரிகளின் முக்கிய கடமை என தெரிவித்து, ஆதிகேசவனை ஒரு வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.

மேலும், ராஜிவ்காந்தி மருத்துவ மனையிலிருந்து தப்பி சென்றுள்ளதால், வழக்கில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளரை வழக்கில் சேர்த்தும், கீழ்ப்பாக்கம் காவல் நிலைய வழக்கை பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பூங்குழலி ஆஜராகி, வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும், ஆவணங்கள் தங்கள் காவல் நிலையத்திற்கு வரவில்லை என பூக்கடை காவல் நிலையத்தில் கூறுவதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாவதி, மாயமான ஆதிகேசவன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், ஆவணங்களை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து பூக்கடை காவல் நிலையத்திற்கு மாற்ற சற்று தாமதமாகிவிட்டதால், ஒரு வார கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று வழக்கை தள்ளிவைத்த நீதிபதிகள், வழக்கு பதிவு செய்த ஆவணங்கள் வந்துவிட்டதா, விசாரணை தொடங்கிவிட்டதா என விளக்கமளிக்கும்படி, பூக்கடை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் அவர் மாயமாகியிருப்பது உறுதியாகிருப்பதால் பூக்கடை போலீசார் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பக்கம் ஆதிகேசவனின் மூன்று மகன்களும், உறவினர்களும் தினமும் ஒவ்வொரு பகுதியாக அவரை தேடி அலைகின்றனர். கொரோனா நோயோடு போனவர் மீண்டு வருவார் என கடந்த 35 நாட்களாக காத்திருக்கிறது அவரது குடும்பம்.

  • ரா.வெற்றிவேல்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button