அகற்றப்படும் ஆதிபராசக்தி பீடத்தின் ஆக்கிரமிப்புகள்..! : பின்னணி என்ன?
நீர்நிலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்திற்குச் சொந்தமான திருமதி அம்மா திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடங்களை அதிரடியாக அகற்றத் தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்திற்கு முன்னதாக அமைந்துள்ளது மேல்மருவத்தூர். இங்கே அமைந்துள்ள ஆதிபராசக்தி கோவில் அனைவராலும் அறியப்பட்டது. 1960&1970 களில் எளிய பின்னணியை கொண்டிருந்தவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியே இங்கு வந்து ஆசிபெரும் பிரசித்தி பெற்றவருமான, தேர்தலில் தனது பக்தர்களும் பொதுமக்களும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அறிவுரை கூறும் அளவிற்கு பிரமாண்ட வளர்ச்சியைப் பெற்றிருப்பவருமான பங்காரு அடிகளார் தலைமையேற்று நடத்துவதே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்.
1970களில் வேப்பமரத்தடியில் தனியாக அமர்ந்து குறி சொல்லிக் கொண்டிருந்தவர். தற்போது தன்னை அம்மா என்று அறிவித்துக் கொண்டுள்ளார். மற்ற கோயில்கள், சாமியார்களைப் போல் இல்லாமல் பெண்களும் கோயில் கருவறையில் பூஜை செய்யலாம், வழிபடலாம் என அறிவித்ததன் மூலம் பெண் பக்தர்கள் மத்தியில் ஆதிபராசக்தி கோவிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இதனால் காணிக்கைகளும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பங்காரு அடிகளாரும் வளரத் தொடங்கினார். அப்பகுதியில் இவரைத் தவிர்த்து எவராலும் எந்தத் துறையிலும் தனித்து இயங்க முடியாத நிலைக்கு வளர்ந்து விட்டார்.
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பங்காரு அடிகளாரின் மனைவியை எதிர்த்து யாரும் வேட்புமனு கூட தாக்கல் செய்ய முடியாத நிலைதான் இருந்தது. வேட்புமனுவில் பங்காருவின் மனைவிக்கு மொத்த சொத்துக்கள் மதிப்பு 250 கோடி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் இவரது வளர்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமான இருந்ததோ அதே அளவுக்கு சர்ச்சைகளும் இருந்து வருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டில் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்குச் சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு காரணம் மருத்துவக் கல்லூரி துவங்குவதற்கான அனுமதிக்காக முன்னாள் அகில இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் தலைவர் சேத்தன் கேசாய்க்கு பல கோடி லஞ்சம் பங்காரு அடிகளார் தரப்பில் கொடுத்ததாக சிபிஐயில் வழக்கு பதிவானதால் தான். இந்த சோதனையில் சுமார் 14 கோடி ரூபாய் ரொக்கமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரப் பூர்வமாக அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் மேல்மருவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பழைய நிலைக்கு நீர்நிலைகளை கொண்டு வரவேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் வருவாய் துறையினரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்போடு அகற்றப்பட்டது.
அரசுப் புறம்போக்கு நீர்நிலைகளில் பங்காரு தரப்பினர் மொத்தம் 93 இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதன்படியே தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும் பங்காருவுக்குச் சொந்தமான கல்வி நிலையங்களில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள் அப்பகுதியினர்.
மக்களை ஆன்மீகம் என்கிற பெயரில் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த நடவடிக்கை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
– நமது நிருபர்