தமிழகம்

அழியும் நிலையில் தீப்பெட்டி தொழில் : 35 ஆண்டுகளாக போராடும் தொழிலாளர்கள்

குடிசை தொழிலான தீப்பெட்டித் தொழில் அழியக்கூடிய நிலையில், அபாயத்தில் இருக்கிறது. தீப்பெட்டி தொழில் 1986 இல் இருந்து பாதிக்கக் கூடிய நிலையில் உள்ளது. அன்றைக்கெல்லாம் வைகோவும் நானும் இதற்கான முயற்சிகளை அப்போதே எடுத்தோம். இதற்காகவே தொடர்ந்து 10, 12 ஆண்டுகள் முயற்சி எடுத்ததும் உண்டு. இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, யஸ்வந்த் சிங்கா,தமிழக முதல்வர் கலைஞரை 1998 இல் சந்தித்ததும். இதற்கான போராட்டங்கள் எனக்குத் தெரிந்தவரை 35 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. கோவில்பட்டி நகரில் பல்வேறு போராட்டங்களும் பிரச்சினைகளும் எழுந்தபோது நான் தொடர்பு கொண்டு என்னால் முடிந்த களப் பணிகளை ஆற்றியதெல்லாம் உண்டு.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இச் சிறுதொழில் அன்றாட வறுமைக் கோட்டில் உள்ளவர்களுக்கு, வானம் பார்த்த கரிசல் மண்ணில் விவசாயம் பாதிக்கும் பொழுது தீப்பெட்டி தொழில் கை கொடுக்கின்றது.

மூலப்பொருள் விலையேற்றம், ஜி.எஸ்.டி வரி விதிப்பு நெருக்கடிகளால் திணறிவந்த தீப்பெட்டித் தொழிலுக்கு, ஒட்டுமொத்தமாகவே உலைவைத்துவிட்டது சீன லைட்டர்களின் வருகை” என்று கொதிக்கின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்!

தமிழ்நாட்டில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், கழுகுமலை, குடியாத்தம், காவேரிப்பட்டினம் பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்றுவருகிறது என்றாலும், 80 சதவிகிதத் தீப்பெட்டி உற்பத்தி என்பது கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது. இந்தவகையில், 50 முழுநேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள், 320 பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டி ஆலைகள், 2,000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் இங்கு இயங்கிவருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், 90 சதவிகிதம் பேர் பெண்கள்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஏற்கெனவே மூலப்பொருள்களின் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான தீப்பெட்டித் தொழில், தற்போது சீன லைட்டர்களின் வருகையால் முற்றிலும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 1990 களில் குச்சிகள் கிடைக்காமல் குளோரைடு கிடைக்காமல் போராட்டங்கள் நடந்தன.

சிறு தொழில்கள் பட்டியலிலிருந்து தீப்பெட்டித் தொழிலை நீக்கியதுதான் பாதிப்பு. தீப்பெட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை, 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று ஐந்து வருடங்களாகப் போராடியும், 12 சதவிகிதமாகத்தான் குறைக்கப்பட்டிருக்கிறது. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான அட்டை, பேப்பர், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையும் அதிகரித்தது. எனவே, 14 வருடங்களாக ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்துவந்த தீப்பெட்டியின் விலையை, கடந்த 2021, டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து இரண்டு ரூபாயாக விலை உயர்த்தப்பட்டது. அதற்குப் பின்பும் மூலப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டேயிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் எட்டு முறையாக, மொத்தம் 40 சதவிகிதம் வரைக்கும் விலை அதிகரித்திருக்கிறது. இதனால், 600 தீப்பெட்டிகள்கொண்ட ஒரு பண்டலின் விலையை 300 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக கூடியது. ஆனால், இந்த விலையேற்றத்தை வியாபாரிகள் ஏற்றுக்கொள்ள வில்லை. இதனால் உற்பத்தி ஆர்டர்களும் குறைந்தும்விட்டன.

“தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான எல்லா மூலப்பொருள்களையும், தமிழக அரசின் சிட்கோ மூலம் மானிய விலையில் தர வேண்டும்’ என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கைவைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில், சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக்காலான சிகரெட்லைட்டர்களால்,ஒட்டுமொத்தத் தீப்பெட்டி விற்பனையும் சரிந்து கொண்டிருக்கிறது. 20 தீப்பெட்டிகளின் பயன்பாட்டை ஒரு லைட்டர் ஈடுகட்டுகிறது. புகை பிடிப்பவர்கள் மட்டுமல்லாமல், வீட்டுஅடுப்படிகளிலும் லைட்டரைப் பயன்படுத்துகிற அளவுக்குச் சூழல் மாறியிருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீப்பெட்டிகளால், தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் கலைஞரிடம் இது குறித்துக் கோரிக்கை மனு வைகோ தலைமையில் கொடுத்தபோது தீப்பெட்டித்துறை பிரதிநிதிகளோடு இருந்தவன். இன்னும் இத்தொழில் சீர் படவில்லை என்பது வேதனையான விஷயம். உடனே தமிழ்நாட்டில் பாகிஸ்தான் தீப்பெட்டிக்குத் தடைவிதித்ததோடு, ‘இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்று மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார். இப்போது சீன லைட்டர்களால் திரும்பவும் ஆபத்து வந்திருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க சீன லைட்டர் இறக்குமதிக்குத் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தீப்பெட்டித் தொழிலாளர்கள் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களோ, “கொரோனா காலத்துல வேலையில்லாம ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தோம். நிலைமை கொஞ்சம் சரியாகி, மறுபடியும் தீப்பெட்டி உற்பத்தி ஆரம்பிச்சுடுச்சேன்னு சந்தோஷப்பட்ட நேரத்துல, மூலப்பொருள்கள் விலை ஏறிப்போச்சு, ஆர்டர் குறைஞ்சுபோச்சுன்னு மாசத்துல பாதி நாளுதான் வேலை கிடைகின்றது. இதே நிலைமை தொடர்ந்தால் பட்டினியாத்தான் கிடக்கணும்” என்கிறார்கள்.

லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நம்பியிருக்கும் தீப்பெட்டித் தொழிலை, அழிவுநிலைக்குச் செல்லாமல் பாதுகாக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை!

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button