ஆம்னி பேருந்து நிலையங்களில் அங்கீகாரம் அற்ற தரகர்கள், முகவர்களை அகற்ற உத்தரவு
தமிழகத்தில் ஆம்னி பேருந்து நிலையங்களில் வலம் வரும் அங்கீகாரமற்ற முகவர்கள் மற்றும் தரகர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் முகவர்கள் மற்றும் தரகர்கள், பயணிகளை தாங்கள் விரும்பும் பேருந்துகளில் பயணிக்க விடாமல் அட்டூழியம் செய்வதாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து புறப்படும் எனக் கூறி கட்டாயப்படுத்தி பயணிகளை அவர்கள் பேருந்துகளில் ஏற்றுவதாகவும், ஆனால் அந்தப் பேருந்துகள் 2 மணி நேர தாமதத்திற்குப் பின்னரே புறப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் புகார் கூறப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து ஆம்னி பேருந்து நிலையங்களிலும் அங்கீகாரம் இல்லாத முகவர்கள், தரகர்களை அப்புறப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு தனியாக காவல் நிலையம் திறக்க மதுரை மாநகர் காவல் ஆணையரும், டி.ஜி.பி.யும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் காவல் உதவி ஆய்வாளர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.