அம்மாவின் பெயரைச் சொல்லி அநியாயம் செய்யும் அதிமுக..! : தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும்…: ஜெ.தீபா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. ஆனால் இந்த அரசாணை தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் இல்லத்தை சசிகலாவோ அல்லது அவர் சார்ந்தவர்களோ பயன்படுத்தி விடக்கூடாது என்கிற அவசரத்தில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து அரசாணை வெளியிட்டார். ஆனால் இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்பே ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த விஷயம் எடப்பாடிக்கு தெரிந்தும் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அரசாணையை வெளியிட்டு விட்டார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் ஏற்கனவே நடைபெற்ற வருமான வரித்துறை பட்டியலிலும் இந்த வீடு இடம் பெற்றுள்ளது. வருமான வரித்துறை வகையிலும் பின்னர் சிக்கல்கள் வரும் என்பதை யாரும் எடப்பாடிக்கு எடுத்துச் சொன்னதாகத் தெரியவில்லை. தற்போது தீபா, தீபக் இருவரும் தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இறங்குமுகமாகவே கருதப்படுகிறது. தீபாவையும், தீபக்கையும் நீதிமன்றத்திற்கு போகாமல் தடுத்திருந்தால் எடப்பாடிக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது. ஆனால் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறது தமிழக அரசு.
இந்தத் தீர்ப்பு கிடைத்ததும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கணவர் மாதவனுடன் போயஸ் கார்டன் வீட்டின் அருகே சென்றார். உடனே தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதாவது ஊரடங்கு நேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்திற்கு தீபா வந்ததால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். ஆகையால் போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டார்கள். இந்நிலையில் தீபா பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து தீபா கூறுகையில்.. எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்த அரசாங்கம் என்னை ஓட ஓட துரத்துவார்கள் என்பதை நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன். அதனால்தான் மாநில ஆளுநரிடம் எனக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க இருக்கிறேன். போயஸ் கார்டன் சாலை என்பது பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் சாலை. நான் அந்த வீட்டை திறக்கச் சொல்லி வீட்டிற்குள் செல்ல வில்லை. சாலையில் சென்றதற்கே பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுக அரசு என் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள்.
நான் அந்த வீட்டில் பிறந்து எனது அத்தையின் வளர்ப்பில் அந்த வீட்டில் வளர்ந்தவள். உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் என்னை பார்க்கவிடாமல் தடுத்தது இந்த அதிமுக அரசுதான். ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கூட அவரின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூட என்னை அனுமதிக்காமல் தடுத்தது இந்த அதிமுக அரசு தான். மெரினாவில் என்னை ஓட ஓட விரட்டினார்கள். இதே இல்லத்திற்கு வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். இப்போது நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அதிமுக அரசால் ஏற்றுக் கொள்ள முடியாமல் மனிதாபிமானம் இல்லாமல் என்மீது நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்து இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தனி மனிதர்களுடைய சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்தும்போது அது பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அதாவது பாலம் அமைப்பது, நீர்நிலைகள் அமைப்பது போன்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே தான் தனியார் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியும். இதையும் மீறி அரசாங்கம் தனியார் சொத்துக்களை எடுக்க நினைத்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்கிறது (Article 27) சட்டம். தன்னிடம் அரசு அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்தால் அந்த ரோட்டுக்கு நான் வந்தது தவறு என்று அவர்கள் சொல்வதில் நியாயமில்லை. நீதிமன்றத் தோல்வியை தாங்கிக் கொள்ளமுடியாமல் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். எனது அத்தை இறந்தபிறகு அவரை அசிங்கப்படுத்துவதே அதிமுக அரசுதான். உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்று அபிடவிட் தாக்கல் செய்ததே அதிமுக அரசுதான். அவர்கள் இறப்பில் மர்மம் இருப்பதாக தர்மயுத்தம் செய்த பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவினர் யாருமே ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ஆஜர் ஆகாதது ஏன்? வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்போவதாக இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். எடப்பாடியும், பன்னீரும் மக்களாலும், அதிமுக தொண்டர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் இல்லை. எங்களை நேரடி வாரிசு என்று அறிவித்த பிறகு அந்த வீட்டை மட்டும் இவ்வளவு பெரிய விஷயமாக்காமல் எல்லா சொத்துக்களையம் ஒரு அறக்கட்டளையின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்க வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான செயல்கள் எதையும் எங்களை செய்யவிடாமல் தடுப்பது அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் என்னை மிரட்டுகிறார்கள்.
ஒரு தலைவரின் இறப்பிற்கு பின் அவருடைய திட்டங்களை, அவர் மக்களுக்கு செய்ய நினைத்த நன்மைகளை அவர் சார்ந்த கட்சியினர் செய்து வந்தால் இவர்கள் அவருக்குச் செய்யும் பெருமையாக இருக்கும். இன்றைக்கு முதல்வராக இருந்திருந்தால் மக்கள் இப்போது எந்த துயரத்தையும் சந்தித்திருக்க மாட்டார்கள். தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்று குவித்திருக்க மாட்டார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்திருக்க மாட்டார்கள். சென்னை மக்களை பெருவெள்ளத்தின் போது காப்பாற்றியது போல் இப்போது அம்மா இருந்திருந்தால் மக்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். சரியான வரையறை இல்லாத அரசாங்கம் தான் இந்த அதிமுக அரசாங்கம். தமிழ்நாட்டில் ஜனநாயகமே இல்லை. இதிலிருந்து அம்மாவின் பெயரைச் சொல்லி அநியாயம் செய்யும் அதிமுக வரும் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்பதே உண்மை.
இவ்வாறு தீபா கூறினார்.
- குண்டூசி