அரசியல்

மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசை எதிர்த்து போராட வேண்டும்: சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுகவின் ஒத்துழைப்பை ஆளும் கட்சி கூடுதல் பலமாக எடுத்துக்கொண்டு எக்காரணம் கொண்டும் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று துணிவோடு போராட வேண்டும்” என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, “தமிழக விவசாயிகளும், தமிழக மக்களும் அதிர்ச்சியடையும் வகையில் தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான டி.பி.ஆர். எனப்படும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்திருக்கிறது. காவிரி ஆற்றைத் தடுத்து மேலும் புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கு எதிரானது. தமிழகத்தின் கருத்தைக் கூட கேட்காமல் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்திருப்பது எதேச்சதிகாரமான போக்கு என்றே கருதுகிறேன். ஒன்று, காவிரி மேல்முறையீட்டு வழக்கில் (2453/2007) தமிழக அரசின் சார்பில் இடைக்கால மனு, 2014ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டு, அதில் “மேகதாது அணை கட்ட தடை” கோரப்பட்டது. அந்த இடைக்கால மனு மீது ஒரு தடையுத்தரவை பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடைசி வரை பெறவில்லை. அதுவும் இல்லையென்றால், காவிரி மேல் முறையீட்டு மனுக்கள் முடிவுக்கு வந்த பிறகு, புதிதாக ஒரு வழக்கினை மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தாக்கல் செய்தாவது நாம் தடை பெற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மத்திய அரசுக்கு மேகதாது அணை கட்டும் அனுமதியைக் கொடுக்கும் துணிச்சல் வந்திருக்காது.
இரண்டாவது, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பானது. இந்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு “பார்ட் டைம்” தலைவர் இருக்கிறாரே தவிர, முழு நேர தலைவர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இன்றோடு 189 நாட்களாகி விட்டது. இன்று வரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவரை மத்திய அரசு நியமிக்கவில்லை; நியமிக்க ஆர்வமில்லை.காவிரி மேலாண்மை தலைவரும், மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவரும் ஒரே அதிகாரி என்பதால் இன்றைக்கு தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் முழுநேரத் தலைவர் என்ற பொறுப்பில் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்ட “விரிவான திட்ட அறிக்கை” தயார் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். அவரே காவிரி மேலாண்மை ஆணையத்தின் “பார்ட் டைம்” தலைவராக “ஆணையத்தை கேட்காமல் அணை கட்ட முடியாது” என்று பேட்டியளிக்கிறார். ஆகவே, நடுவர் மன்றத் தீர்ப்பினை செயல்படுத்த அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தையும் மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது. அதுதான் இன்றைய பிரச்னைக்கு இன்னொரு காரணம்.
இப்படியொரு ஆபத்தை நாம் ஏன் அனுமதித்தோம்? ஐந்து வருட பதவி காலம் உள்ள முழுநேரத் தலைவரை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நியமிப்பதற்கு கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசோ, முதலமைச்சரோ வலியுறுத்தாது ஏன்? தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்னையான காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முழு நேரத் தலைவரை நியமிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? கர்நாடகம் இப்படி மேகதாது அணையைக் கட்டிக் கொள்ளட்டும் என்ற உள்நோக்கமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மூன்றாவதாக, 5.10.2018 அன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து விட்டு பத்திரிகை நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர், “மேகதாது அணை கட்ட இன்னும் ஒரு வாரத்தில் மத்திய நீர் வள ஆணையம் அனுமதி வழங்கும்” என்று வெளிப்படையாக அறிவித்தார். “ஒரு வாரத்தில் அனுமதி” என்று அவர் உறுதியுடன் கூறியதும், தமிழக அரசு இதைத் தடுக்கும் முயற்சியில் தாமதிக்காமல் ஈடுபட்டிருக்க வேண்டும்.தமிழகத்திலிருந்தும் ஒரு அனைத்துக் கட்சிக் குழுவினை – அல்லது அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரை சந்தித்து இதை தடுத்திருக்க வேண்டும்.
“ஒரு வாரத்தில் அனுமதி கிடைக்கும்” என்று கர்நாடக முதல்வர் மிக உறுதியாகக் கூறிய நேரத்தில் நாம் இன்னும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருந்திருக்க வேண்டும். அதில் தவறி விட்ட காரணத்தால் இன்றைக்கு, மத்திய நீர்வள ஆணையம் தமிழகத்தின் கருத்துகளை கேட்காமலேயே அனுமதி கொடுத்திருக்கிறது என்ற தமிழகத்தின் பரிதாபகரமான நிலைமையினை நாம் உணரவேண்டும்.“காவிரி நதி தேசிய சொத்து. அதை கர்நாடக மாநிலம் உரிமை கொண்டாட முடியாது” என்று நெற்றியடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏன் “தமிழ்நாட்டிற்கு நடுவர் மன்றம் அளித்துள்ள உரிமையை பாதிக்கும் வகையில் கர்நாடகம் எந்த வகையிலும் காவிரிக்கு சொந்தம் கொண்டாட முடியாது” என்று அறுதியிட்டு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.“நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவது குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இருக்கிறது” என்று உச்சநீதிமன்றம் உருவாக்கிய “ஸ்கீம்” சொல்கிறது. ஆனாலும் தமிழகத்தின் மெகா குடிநீர் திட்டங்களுக்கு அச்சுறுத்தலாக, தமிழகத்தின் நீர்ப்பாசனத்திற்கு அச்சுறுத்தலாக, தமிழக விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக, அவர்களை நிர்கதியில் விட, கர்நாடக மாநில அரசு மேகதாது அணையை கட்ட திட்டமிடுகிறது.
திமுகவை பொறுத்தவரை கடந்த காலத்தில் ஆளுங்கட்சியின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வழி விட்டு, அறிவித்திருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தையே ரத்து செய்து ஒத்துழைப்பு கொடுத்தது.இப்போது கூட மேகதாது பிரச்னை ஏற்பட்டவுடன் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதலில் தீர்மானம் போட்டோம்.ஏன், திருச்சியில் கடந்த 4ம் தேதி ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம். எதிர்கட்சியாக தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையான காவிரியில் திமுக முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.இந்த ஒத்துழைப்பை ஆளும் கட்சி கூடுதல் பலமாக எடுத்துக்கொண்டு எக்காரணம் கொண்டும் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று துணிவோடு போராட வேண்டும் என்று திர்பார்க்கிறேன். இருமுறை இதே மன்றத்தில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் போட்டு விட்டோம். அதை அவர்கள் மதிக்கவில்லை. தமிழக உரிமைகளை மதிக்க முன்வரவில்லை. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றும் போது பலன் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
ஆகவே, இந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் தீர்மானமாக இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும். இருந்தாலும் தமிழக நலன் கருதி இந்தத் தீர்மானத்தை திமுக சார்பில் ஆதரிக்கிறேன். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. மத்திய அரசும் பேரிடர் நிதியை இன்னும் தரவில்லை. எனவே, கஜா புயல் நிவாரணப் பணிகள் பற்றி விவாதிப்பதற்கு நாளை வரை சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்”என்று பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button