ஊழல் புகாருக்குள்ளான விஷால் யோக்கியரா? அவரே சொல்வதுபோல் அயோக்கியரா?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் ஜெ.கே.ரித்தீஸ், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, கிஷோர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பூட்டு போட்டனர். இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியதால் தமிழ் சினிமா மட்டுமின்றி தமிழ்நாடே பரபரப்பானது.
இந்நிலையில் ஜெ.கே.ரித்தீஷ்-ஐ சந்தித்து இது சம்பந்தமாக நாம் கேட்ட போது,
“விஷால் கடந்த தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை சங்கத்தில் பொதுக்குழுவை கூட்டி சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இன்னும் பொதுக்குழுவை கூட்ட வில்லை. விஷாலின் நிர்வாகம் சங்கத்தின் நிரந்தர வைப்பு நிதியை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளனர். பைரசியை ஒழிப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை என்ன ஆனது க்யூப் கட்டணத்தை குறைப்பதற்காக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டதில் எந்த பயனும் ஏற்படவில்லை.
படவெளியீட்டை ஒழுங்கு படுத்த வில்லை. நான்கு படங்கள் திரைக்கு வரும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது அதிக படங்களை வெளியிடுகிறார். இதனால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கேபிள் டிவி மூலம் மாதம் ஒன்றரை கோடி ரூபாய் வருவதையும் தடுத்துவிட்டார். கர்நாடகாவில் டப்பிங் படங்களுக்கு அனுமதி இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரே கன்னட படத்தை டப்பிங் செய்து தமிழில் வெளியிடுகிறார். தயாரிப்பாளர் சங்கத்திற்கு இளையராஜா ரூ 50 கோடி தொகையை ராயல்டியாக தர வேண்டியுள்ளது. அந்தத் தொகையை வாங்காமல் அவருக்கு 3 1/2 கோடி ரூபாய் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கட்டாயம் எதுவுமில்லை.
சென்சார் சர்டிபிகேட் வந்தால்தான் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களுக்கு ரிலீஸ் தேதி கொடுக்கிறார். ஆனால் விஷாலின் படங்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடக்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவிக்கிறார்.
தயாரிப்பாளர்களை காப்பதற்காகவே நான் இந்த சங்கத்திற்கு வந்தேன் என்று மீடியாக்கள் முன்பாக கூறுகிறார். மீடியா நண்பர்களான நீங்களே கேளுங்கள்? இதுவரை சிறு பட தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்திருக்கிறார் என்று சிறுபட தயாரிப்பாளர்களுக்கு கியூப் கட்டணத்தை குறைத்து இருக்கிறாரா? பெப்சியில் கட்டணத்தை குறைத்து இருக்கிறாரா?
கடந்த சில தினங்களாகவே தயாரிப்பாளர் சங்கத்தில் முந்தைய நிர்வாகம் வைத்துச்சென்ற 7 கோடியே 80 லட்சம் வைப்பு நிதி எங்கே என்றுதான் கேட்கிறோம். இதுவரை விஷால் எங்களுக்கு பதில் சொல்லவே இல்லை. உண்மையிலேயே சரியான முறையில் நிர்வாகம் செய்திருந்தால் மீடியாவிடமாவது அந்தத் தொகைக்கான கணக்கு வழக்குகளை காண்பிக்க வேண்டியது தானே?
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு சங்கத்தின் பணம் 25 லட்சத்தை உதவித்தொகையாக கொடுத்தார். ஆனால் தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஏன் இதுவரை சங்கத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படவில்லை.” என்று கேள்வி எழுப்பினார்.