நெல் ஜெயராமன் : ஒரு சாமானியனின் சாதனைப் பயணம்
நாம் மறந்த அல்லது அரசியலால் இழந்த அனைத்து பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்க வேண்டும் என்ற பெருங்கனவு கண்டவர் எப்போதும் எழாத உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.
1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார். நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003-ல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார். அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுமுதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் நெடும் பயணத்தை நெல் ஜெயராமன் தொடங்கினார். இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையத்தையும் உருவாக்கியுள்ளார்.
ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் 2 கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திரு விழாவுக்கு வரும்போது 4 கிலோ விதையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.
ஜெயராமனின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு – பாரம்பரிய அறிவுக்கான விருதையும், ஷிஸிமிஷிஜிமி அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான ஷிஸிமிஷிஜிமி சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது. கொடுத்த பணியை சிறப்பாகச் செய்ததால், ஜெயராமனாக இருந்த அவருக்கு ‘நெல்’ ஜெயராமன் என பெயர் சூட்டினார் நம்மாழ்வார். புற்று நோய் வந்த பின்பு, அவர் கலந்து கொண்ட ஓர் கூட்டத்தில், எனக்கு புற்றுநோய். என் மரணத்தை தள்ளி போட்டுக் கொண்டிருப்பது மரபு நெல் ரகங்கள்தான் என்று இறப்பை நோக்கிய பயணத்தையும் மரபு நெல்லை பரப்பும் பிரசாரமாக மாற்றியவர்.
இவரின் மறைவுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டும் அஞ்சலியும் செலுத்தினர். இவரின் இறப்பு இயற்கையின் முறையில் நஞ்சில்லா விவசாயத்தை விளைவிக்க விரும்பும் விவசாயிகளுக்கு பேரிழப்பாகவே கருதப்படுகிறது.