“போத்தனூர் தபால் நிலையம்” திரைப்பட விமர்சனம் – 3 / 5
ஃபேஷன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், G ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில் பிரவின் நடித்து, இயக்கிய “போத்தனூர் தபால் நிலையம்” திரைப்படம் மே 27 முதல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் உலகளாவிய வெளியீடாக வெளியாகியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள பிரவீன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படம் 90களின் பின்னனியில் எடுக்கப்பட்டுள்ளதால் அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், மக்களின் எதார்த்தமான வாழ்க்கை முறை என ஒவ்வொரு காட்சியும் நகரும் போது, படம் பார்பபவர்களை 90 காலகட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது. அன்றைய காலகட்டத்தில் தபால் நிலையம் பற்றிய அனுபவங்கள் சுவாரஸ்யமான ஒன்றாகும். அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய இளைஞர்கள் தபால் நிலையங்களை அதிகமாக பயன்படுத்துவதில்லை. தபால் நிலையம் என்றால் இப்படித்தான் இருந்திருக்கிறது என்று இன்றைய இளைஞர்களும், அடுத்த தலைமுறையினரும் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றும் கதாநாயகனாகனின் தந்தை மிகவும் நேர்மையானவராக பணியாற்றி வருகிறார். அங்கு பணிபுரியும் காசாளர் தனது தவறான பழக்கத்தால் பணத் தேவைகளுக்கு ஆளாகிறார். இதனால் தான் பணிபுரியும் தபால் நிலையத்தில் பணத்தை எடுக்க திட்டமிடுகிறார். தபால் நிலையத்தில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்திருக்க கூடாது. இரண்டு நாள் விடுமுறை என்பதால் திருட்டுக்கு பயந்து பெரிய தொகையை தபால் நிலையத்தில் வைக்காமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் போது பணம் கானாமல் போகிறது.
கதாநாயகன் அமெரிக்காவில் தனது வேலையை உதறிவிட்டு, சொந்த மண்ணில் கணினி தொழில் செய்வதற்காக வங்கியில் கடன் கேட்பதற்கு கதாநாயகி மற்றும் தனது நண்பருடன் வங்கிக்கு செல்கிறார்.
காணாமல் போன பணம் கிடைத்ததா? போஸ்ட் மாஸ்டரின் நிலைமை என்னானது? வங்கியில் கடன் கிடைத்து கணினி தொழில் தொடங்கினாரா? கதாநாயகன் என்பது மீதிக்கதை. மொத்தத்தில் தபால் நிலைய கொள்ளை என்பது தான் கதையின் கரு. குற்ற விசாரணை சம்பந்தப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் கதையாக “போத்தனூர் தபால் நிலையம்” அமைந்துள்ளது.