Uncategorized

முதியவரை குடும்பத்துடன் சேர்த்த கொரோனா

தூத்துக்குடியில்மனைவி இறந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியவர், 23 ஆண்டுகளுக்குப்பிறகு குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடியில் மனிதம் விதைப்போம் அறக்கட்டளை, ஆர்.சோயா அறக்கட்டளை, ஹெல்பிங் ஹேன்ட்ஸ் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் சேர்ந்து, அங்கு  மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த 60 பேரை மீட்டு மாநகராட்சி திருமண மண்டபம் ஒன்றில் வைத்து பராமரித்து வருகின்றன. 60 பேருக்கும் முடிதிருத்தி, குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து மூன்று வேளையும் உணவளித்து வருகின்றனர். இது தொடர்பான செல்போன் காட்சிகள் இணையத்தில் பரவிய நிலையில், அதில் இருந்த ஒரு முதியவரின் மகன் தன்னார்வலர்களைத் தேடி வந்துள்ளார்.

அந்த முதியவர் தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பதும் வெல்டிங் தொழில் செய்து வந்தவர் என்பதும் அவரைத் தேடி வந்தவர் அவரது மூத்த மகன் ராமச்சந்திரன் என்பதும் தெரியவந்தது. 23 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் தனது தாய் இறந்ததை நேரில் பார்த்ததால், மனநிலை பாதிக்கப்பட்டு தந்தை வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காதவர் தற்போது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் ராமச்சந்திரன் கூறினார்.  தந்தையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்ட ராமச்சந்திரனின் கோரிக்கையை மறுத்த தன்னார்வலர்கள் அமைப்பு, மனநல மருத்துவமனையில் அவரை சேர்த்து முழுமையாக குணமடைந்த பிறகு ஒப்படைப்பதாக அனுப்பி வைத்துள்ளனர்.

23 ஆண்டுகளாக அழுக்கு சட்டை, வெட்டப்படாத முடியுடன் மாநகரில் அடையாளம் தெரியாமல் சுற்றித் திரிந்த முதியவரை இந்த ஊரடங்கு மீட்டு குடும்பத்துடன் சேர்த்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button