ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லம் ஆக்க கூடாது: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:- ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பெங்களூரு ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், அதை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தாலும், வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்றார்.
மனுதாரர் டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் அரவிந்தன் கூறியிருப்பதாவது:-
‘இந்த வழக்கு தொடர்ந்த பின்னர், சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்து போயஸ் கார்டன் பகுதி மக்களில் கருத்தை தமிழக அரசு கேட்டுள்ளது. இதற்காக நடந்த கூட்டத்தில், அப்பகுதி மக்கள், வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டை இதுபோல நினைவிடமாக மாற்றினால், அதனால் அப்பகுதியில் வசிப்பவருக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும் என்றும் பொதுமக்கள் வந்து சென்றால், எதிர்காலத்தில் போயஸ் கார்டன் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கும் என்று கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 20ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கூடுதல் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.