இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு... தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பெண்ணிடம் நகை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (62), இவரது மனைவி ஜானகி(55) யுடன் இரு சக்கர வாகனத்தில் செம்மிபாளையம் அருகே உள்ள சாமிகவுண்டன்பாளையத்தில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வந்துள்ளனர்.
இந்நிலையில் மனைவியின் உறவினர் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாகவும் வந்து அழைத்துச்செல்லுமாறு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுப்பிரமணி தனது மனைவியுடன் பேருந்து நிலையம் சென்று பார்த்தபோது அங்கு உறவினர் இல்லாததால் திரும்பவும் இருசக்கர வாகனத்தில் சாமிகவுண்டன் பாளையம் நோக்கி மனைவியுடன் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த இருவர் சுப்பிரமணியத்தின் மனைவி ஜானகியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுண் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியம் பின்னால் துரத்தியபடி சென்றுள்ளார். அப்போது பள்ளி அருகே சென்ற போது வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதனிடையே தனது மனைவியின் செயினை திருடன் பறித்துக்கொண்டு தப்பி ஒடுவதை அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்குள்ளவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கிருந்த சிசி டிவி காட்சிகளை சோதனையிட்டபோது நீண்ட நேரமாக தம்பதியினரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
சிசி டிவியில் பதிவான நபர்கள் முன்னாள் ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்தும், பின்னாள் இருப்பவர் முகத்தை மூடிய படி கர்ச்சீப் கட்டியும் செயின்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதிவான இரு சக்கர வாகனத்தின் பதிவெண்ணை கொண்டு போலீசார் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். கிராமப்பகுதியில் இது போன்று செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றாலும், செம்மிபாளையம் ஊராட்சி நிர்வாகத்தால் சுமார் 31 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காண பெரும் உதயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.