“பான் இந்தியா” படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல நடிகர்.
கன்னித்தீவு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர் பேரரசு, பி.ஆர்.ஓ விஜய் முரளி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் தியாகராஜன் பேசும்போது… தினசரி செய்தித்தாளை எடுத்ததும் முதலில் பார்ப்பது “கன்னித்தீவு” தான். திரைப்படங்களுக்கு இது வரை யாரும் இந்த தலைப்பை வைத்ததில்லை. அனைவரையும் ஈர்க்கும் விதமாக இந்தப் படத்திற்கு “கன்னித்தீவு” என பெயரிட்டுள்ளனர். இந்த படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று கூறி அமர்ந்தார். அதன்பிறகு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் தயாரிப்பாளரும் இயக்குனருமான ராமநாராயணன் 28 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடிப்பார். அவ்வாறு எடுக்கப்பட்ட படங்கள் 100 நாட்கள் ஓடியது. ஆனால் தற்போது 280 நாட்கள் எடுக்கப்படும் படங்கள் 20 நாட்கள் கூட திரையரங்குகளில் தாக்குப் பிடிப்பதில்லை. இந்தப் படத்தின் பாடல்கள் நன்றாக உள்ளது. இசையமைப்பாளர் ஆங்கிலப் படத்திற்கு இணையாக இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி அமர்ந்தார்.
தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசும்போது… ஆயிரம் கோடி முதலீட்டில் படம் எடுப்பது என்பது சரியான அணுகுமுறை கிடையாது. இப்போது எத்தனை கோடிகள் செலவு செய்து படம் எடுத்தாலும், கதை இல்லையென்றால் படம் ஓடாது. புதிய இயக்குனர்கள் கதையை மையப்படுத்தி படங்களை இயக்க முன்வர வேண்டும். தற்போது பிற மொழிப் படங்கள் அதிகமாக இங்கு வெளியிடுகிறார்கள். கேட்டால் “பான் இந்தியா படம்” என்கிறார்கள். அப்படியானால் ஓ.டி.டி யில் வெளியிடுங்கள். பிற மொழிப் படங்கள் இங்கு முப்பது சதவீதம் தான் வெளியிட வேண்டும்.
தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திரையரங்குகள் நிலைக்க வேண்டுமானால் சிறிய முதலீட்டு படங்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்றார். மேலும் பேசுகையில் “கன்னித்தீவு” படத்தை தயாரித்து, இயக்கிய இயக்குனர் சுந்தர் பாலுவை பாராட்டியதோடு, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி அமர்ந்தார். அதன்பிறகு இயக்குனர் பேரரசு, இயக்குனர் சுந்தர் பாலு உள்ளிட்ட பிரபலங்கள் பேசினர்.
இறுதியாக பேசிய இந்தப் படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சுபிக்ஷா பேசும்போது… இந்த படத்தில் நடிப்பு, பாடல், ஆக்ஷ்ன் என கதாநாயகன் செய்யும் அனைத்தையும் கதாநாயகிகளான நாங்கள் செய்திருக்கிறோம். “கன்னித்தீவு” அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார் சுந்தர் பாலு என்று சந்தோஷம் பொங்க பேசி முடித்தார்.
இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்