குழந்தைகள் நலன் குழந்தைகள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு உடல் ரீதியான வன்கொடுமைகளில் ஈடுபட்டு வரும் “ஆதீஸ்வரர் குழந்தைகள் இல்லத்தின்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் செயல்பட்டு வருகிறது ஆதீஸ்வரர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம். இந்த இல்லத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கிடைக்கப்பற்ற புகாரின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழு விசாரணை மேற்கொண்டது.
அதில், அந்த இல்லத்தில் தங்கியிருந்த 5 மற்றும் 8 வயதுடைய இரு சிறார்கள் அளித்த வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்ல நிர்வாகியின் மகன் கோகுல் என்பவர் கைகளிலே சூடு வைத்ததாகவும், குழாய்களை பொருத்தும் பிளாஸ்டர் கொண்டு தலையில் ஒட்டி, பின்னர் இரத்தம் வரும் அளவிற்கு பிய்த்து எடுத்து துன்புறுத்தியதாக அச்சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான தீக்காய தழும்புகளும், தலையில் காய தழும்புகளும் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குழு, இது தொடர்பான புகாரை கடந்த அக்டோபர் மாதம் சமூக நலத்துறைக்கு அளித்துள்ளது. இதனிடையே, அந்த இல்லத்தில் தங்கியிருந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, தாம்பரத்தில் உள்ள வேறு ஒரு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.
அதேசமயம், மேற்கூறிய முகவரியில் இயங்கிய இவ்வில்லமானது அரசு பதிவு பெறவில்லை எனவும், ஏற்கனவே அவர்கள் இருந்த முகவரிக்கு மட்டுமே அரசு பதிவு வழங்கப்பட்டுள்ளது எனவும் குழந்தைகள் நல அமைப்பின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த புகாரில், “சுமார். இரண்டு வருடங்களுக்கு முன் அரசு பதிவு பெற்ற முகவரிக்கு குழுமம் சென்று ஆய்வு செய்த போது அங்கே ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டும் இருந்தார். இல்லப்பதிவேடுகள் எதுவும் அரசு விதிகளின் படி பராமரிக்கப்படவில்லை என்பதோடு, இல்லத்தின் கழிவறைகள் மிகவும் ஆரோக்யமற்றும், கதவுகள் உடைந்த நிலையில் பாழடைந்தும் காணப்பட்டது. குழுமமானது இதற்கான நடவடிக்கையாக நோட்டீஸ் அனுப்பியபோது. இவ்வில்ல நிர்வாகிகள் குழுமத்தை கேட்டுக்கொண்டதற்கிணங்க, இவ்வில்லத்தை சீர்செய்ய மறுவாய்ப்பு வழங்கியது.
இப்படியிருக்க தற்போது அரசு பதிவு பெறா முகவரியில் குழந்தைகளை குழுமத்தின் அனுமதி இல்லாது, சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்ததோடு, physical abuse அதாவது உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தபட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு அரசு அங்கீகார இல்லத்தில் சிறார்களுக்கு நடைபெற்ற பாலியல் ரிதியான துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கூறுகையில், “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நல அதிகாரி ஒரு வாரத்திற்கு முன்பு அந்த இல்லத்தை ஆய்வு செய்தனர். விதிமீறல் நடைபெற்றது கண்டறியப்பட்டு, 18 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்கள் வேறு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர்.” என்றார்.
அந்த இல்லத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் இருந்ததாக கூறியுள்ள மாவட்ட ஆட்சியர், அப்பெண் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை என தெரிவித்ததுடன், இது தொடர்பான முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகள் நல ஆணையத்தின் உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இப்பிரச்சினை பூதாகரமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த இல்லம் ஆண்களை மட்டுமே சேர்த்து கொள்ள அனுமதியளிக்கப்பட்ட ஒன்று. ஆனால், பெண் குழந்தைகளையும் சட்டத்துக்கு புறம்பாக சேர்த்துள்ளனர். இங்கு சேர்க்கப்படுள்ள குழந்தைகள் மாட்டு தொழுவத்தில் வேலை பார்க்க பணிக்கப்படுவதுடன், அங்குள்ள முதியவர்களுக்கு சேவை செய்யவும் பணிக்கப்படுவதாக குளோரி ஆனி என்பவர் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-நமது நிருபர்