தொழிலாளர்களின் வேலைக்கு உலை வைக்கும் பெப்சியின் நிர்வாகிகள்…
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊரடங்கை தளர்த்த தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அனுமதியைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிறுவனம் EVP படப்பிடிப்பு தளத்திலும், பிரசாத் ஸ்டுடியோவிலும் பிற இடங்களிலும் கிட்டத்தட்ட இருபது தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பல தொழிலாளர்கள் இந்த கொரோனா காலத்திலும் வேலைவாய்ப்பை பெற்று தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.
EVP படப்பிடிப்பு தளத்தில் தனியார் தொலைக்காட்சியின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது பெப்சியின் நிர்வாகிகள் சென்று அந்த படப்பிடிப்பை இயக்கி தயாரிக்கும் தயாரிப்பாளரிடம் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளருக்கும், பெப்சி நிர்வாகிகளுக்கும் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்று வாக்குவாதம் பெரிதாகி இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு சண்டை பெரிதாகி இருக்கிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் படப்பிடிப்பு நடத்தும் நிறுவனம் பெப்சியில் அனுமதி கடிதம் வாங்கிய பிறகுதான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்ற புதிய சட்டத்தை பெப்சியின் தலைவர் பிறப்பித்து இருக்கிறார். அதன்படி தனியார் தொலைக்காட்சி நிறுவன படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது பெப்சி.
ஆனால் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்ற நிர்வாகிகள் குறிப்பாக பெப்சியின் செயலாளரே படப்பிடிப்புக்கான அனுமதிக் கடிதத்தை கேட்டதுதான் விந்தையிலும் விந்தையாக இருப்பதாக அங்கு இருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள். அப்போது வாகன ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி சங்கத்தின் உறுப்பினர்கள் வாகனம் தான் ஓட்ட வேண்டும் என்ற பிரச்சனையை பேசும்போது பிரச்சனையாகி தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் பெப்சியில் இருக்கக் கூடாது. அவ்வாறு அந்த சங்கம் பெப்சியில் இருந்தாலும் நிர்வாகத்திற்குள் வரக்கூடாது என்று பெப்சியின் செயலாளரிடம் முறையிட்டு இருக்கிறார். இதைக் கேட்ட பெப்சியின் செயலாளர் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது என பார்வையிடத்தான் நாம் வந்தோம். ஆனால் கிணறு தோண்டப் போய் பூதம் கிளம்பிய கதையாக தயாரிப்பு நிர்வாகிகளை பெப்சியில் சேர்க்கக் கூடாது அவர்களை நிர்வாகத்திற்கு வரவிடக்கூடாது என தேவையில்லாத பிரச்சனைக்குள் நம்மை இழுத்து விடுகிறார்களே என பேச முடியாமல் தவித்திருக்கிறார்.
உடனடியாக பெப்சியின் தலைவர் செல்வமணிக்கு இந்த தகவலை தெரிவித்து முடிவு காணலாம் என்ற அவரது கைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவரது எந்த எண்ணுக்கும் அழைப்பு கிடைக்க வில்லை. ஏற்கனவே நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பால் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள் தற்போது தான் அரசு அனுமதி வழங்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனையும் நிறுத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறார்களே என்று தொழிலாளர்கள் புலம்பி வருகிறார்கள்.
தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் பொறுப்பும் கடமையும் உள்ள பெப்சியின் தலைவர் செல்வமணியின் கைபேசி எண்ணை ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை என நாம் விசாரித்த போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டதாக தகவல் வந்தது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக ஆந்திராவில் இருக்கும் தனது மனைவி ரோஜாவையும், குழந்தைகளையும் பார்த்து வருவதற்காக ஆந்திராவிற்கும் தமிழகத்திற்கும் பலமுறை சுற்றுலா செல்வது போல் போய் வந்து கொண்டிருந்தார். அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பெப்சி நிர்வாகிகளுக்கும் நோயை பரப்பி வருகிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். அதேபோல் இப்போது தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெப்சிக்கு அடிக்கடி வந்து செல்லும் டெக்னீசினயன் யூனியன் தலைவருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இப்போது அந்த சங்கமும் மூடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டபோதே அனைத்து நிர்வாகிகளும் பரிசோதனை செய்து கொண்டு எச்சரிக்கையாக இருந்திருந்தால் அடுத்தடுத்த நிர்வாகிகளுக்கும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்திருக்கிலாம்.
சில வருடங்களுக்கு முன்னாள் EVP யில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பெப்சியில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் அந்த தீர்மானம் எதற்காக எப்போது ரத்து செய்யப்பட்டது என்பதை உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக இதுவரை தெரிவிக்கவில்லை. அதன்பிறகு பல்வேறு விபத்துக்கள் அங்கு நடந்தேறி இருக்கிறது. குறிப்பாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. பெப்சியின் தலைவராக செல்வமணி வந்த பிறகுதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல் படப்பிடிப்பு நடந்ததால் தான் விபத்துக்கள் நடந்து வருகிறது.
இருபத்தி நான்காயிரம் உறுப்பினருக்குத் தலைவராக தன்னை காட்டிக் கொள்ளும் பெப்சியின் தலைவர் செல்வமணி உறுப்பினர்களின் எண்ணிக்கையை முறையாக காண்பிக்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் கேட்கிறார்கள். இதுவரை மொத்த உறுப்பினர்களையும் ஓர் இடத்தில் கூட்டி கூட்டம் நடத்தி இருக்கிறாரா? மொத்த உறுப்பினர்களுக்கும் நலவாரியத்தில் கொரோனா நிவாரணத் தொகை பெற்றுத் தந்திருக்கிறாரா..?
சமீபத்தில் நடந்த ஒருமைப்பாட்டு தின நிகழ்ச்சிக்கு காவல் நிலையத்தில் அனுமதி கடிதம் வழங்கியதில் கூட அறுநூறு நபர்கள் கூடுவார்கள் என்றுதான் பெப்சியின் தலைவர் எழுதி அனுப்பி இருக்கிறார். 24 ஆயிரம் உறுப்பினர்களின் தலைவர் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் மொத்த உறுப்பினர்குளும் கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு இருக்கிறது. சங்கங்களின் நிர்வாகிகளே 300 பேருக்கு மேல் இருக்கும்போது 600 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று எந்த அடிப்படையில் செல்வமணி கடிதம் எழுதி அனுமதி கேட்கிறார். ஏன் இந்த 600 உறுப்பினர்கள் மட்டும்தான் இவரது தலைமையை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று செல்வமணி நம்புகிறாரா? என்று சினிமா சங்கங்களின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
- சூரியன்