தமிழகம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1008 ஆடுகளை வழங்கினார் : கவிஞர் வைரமுத்து

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை மொத்தமாக சிதைத்துப் போட்டிருக்கிறது கஜா புயல். புயலின் பாதிப்புகளால் 63 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 12,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்திருக்கின்றன. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்திருக்கின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக் கரம் நீட்டி வருகிறார்கள். அதேபோல், அரசு தரப்பிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்” என்று தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
தஞ்சாவூர் வல்லம் அருகே தனியார் பள்ளி ஒன்றில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, நாகை பகுதி மக்களுக்கு 1008 ஆடுகளைக் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது, “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது. அந்நிய முதலீடு கிடைத்தால், அதை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரத் தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க வேண்டும். உயர் விளைச்சல் ரக தென்னங்கன்றுகளை இறக்குமதி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
புயல் பாதிப்பு தொடர்பாகத் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி போதாது. எனவே தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தைக் கணக்கிட்டு, அதிக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ் மண்ணை மீட்டெடுக்க வேண்டும். இந்த துயரத்திலிருந்து மீண்டு எழுவோம் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் சவால்விட்டு செயல்பட வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். மேலும், சேதமடைந்த விவசாய நிலத்தையும் மீட்டுக் கொடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சிறப்பு பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட அனுமதி வழங்கியிருப்பது வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. எனவே மத்திய அரசும் கர்நாடக அரசும் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button