மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர் மீது ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மைய பேராசிரியர் கர்ணமகாராஜன், இதழியல் துறையில் பி.எச்.டி. மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டியாக உள்ளார். இவருக்கு எதிராக ஆராய்ச்சி மாணவி ஒருவர் பல்கலைக்கழக பதிவாளர், கல்வித்துறை அதிகாரி, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், கேரளாவைச் சேர்ந்த தன்னிடம் 2 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பி.எச்.டி. படிப்பில் சேர்த்துக் கொண்டதற்கான முன்தேதியிட்ட உத்தரவை வழங்கியதாகவும், அன்று முதல் தன்னை அடிமை போல் நடத்தியதுடன் சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் பேசக் கூடாது என கட்டளையிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கைரேகை ஜோசியம் பார்ப்பதாக கூறி கையை பிடிப்பது, சொந்த ஊருக்கு செல்லும்போது காரில் வருமாறு கட்டாயப்படுத்துவது, அவ்வப்போது இரவில் சாப்பிட ஓட்டலுக்கு கூப்பிடுவது என கடந்த ஓராண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.
அத்துடன் பேராசிரியர் கூறும் நபரை தனியாக சந்திக்க வற்புறுத்தியதுடன் ஓராண்டாக முனைவர் பட்டம் பெறவிடாமல் இழுத்தடித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, அத்துமீறும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இப்புகார் குறித்து பதிவாளர் சின்னையா விசாரித்து வருகிறார். இந்நிலையில் காமராசர் பல்கலைக்கழகத்துக்கு வந்த சட்டத்துறைச் செயலர் பூவலிங்கம் தலைமையிலான பல்கலை. கன்வீனர் குழுவிடமும் மாணவி, துறைத் தலைவர் கர்ண மகாராஜனுக்கு எதிராகப் புகார் செய்தார். இது தொடர்பாக கன்வீனர் குழு ஒரு மணி நேரம் விசாரித்தது.
இப்புகார் குறித்து கர்ண மகாராஜன் கூறும்போது, “மாணவி ஓராண்டுக்கு முன், ஆராய்ச்சி படிப்புக்கு சேர்ந்தார். அவர் தொடர்ச்சியாக வகுப்புக்கு வருவதில்லை. இது குறித்து அவரிடம் சொல்லியும் கேட்கவில்லை.
ஏற்கெனவே, அடிக்கடி விடுப்பு எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு, மாணவிக்கு துறை சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. விடுதியிலும் அவர் அடிக்கடி ஆப்சென்ட் ஆவது தெரிய வந்தது. இது குறித்து கேட்டதன் வெளிப்பாடுதான் என் மீது புகார் கொடுத்துள்ளார்.
கடந்த ஓராண்டில் பல்கலை.யில் அவரது நடவடிக்கை தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனக்கு எதிரானவர்களின் துண்டுதலில் மாணவி என் மீது புகார் அளித்துள்ளதாக சந்தேகிக்கிறேன்.
என் மீதான புகார் குறித்து, பதிவாளர் சின்னையாவிடம் எனது தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளேன். மாணவியின் ஒழுங்கீனம் தொடர்பாக, என்னிடம் உள்ள சில ஆதாரங்களைக் கொடுப்பேன். கன்வீனர் குழுவினர் என்னை அழைக்க வில்லை. அவர்கள் அழைத்தால் உரிய விளக்கத்தை அளிப்பேன்” என்றார்.
பேராசிரியருக்கு எதிரான ஆராய்ச்சி மாணவியின் பாலியல் புகாரை விசாரித்து அறிக்கை அளிக்க, பல்கலை.யில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. புதிய குழு இருதரப்பிலும் விசாரித்து, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கும். தவறு இருக்கும் பட்சத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில், பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பேராசிரியர் ஒருவர் மீது ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் தெரிவித்துள்ளது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.