திருப்பூரில் கோடிகளை அள்ளிச்சென்ற கட்டிட தொழிலாளர்கள், லட்சங்கள் மாயமானதாக புகார் அளித்த தொழிலதிபர்..!
திருப்பூர் மாவட்டம் குள்ளே கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் பின்னலாடை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் அவ்வப்போது கட்டிட வேலை செய்வதற்கு ஆண்டிப் பாளையம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை அழைத்து வேலையை செய்ய வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார் துரைசாமி.
கடந்த 2020 ஆம் ஆண்டு தனது பழைய வீட்டில் உள்ள சிறிய வேலைகளை சரி செய்வதற்காக ராதாகிருஷ்ணனை அழைத்து வேலை செய்ய அனுமதித்துள்ளார். அப்போது கொத்தனார் ராதாகிருஷ்ணன் உதவிக்காக சதீஷ் என்பவரை அழைத்துக்கொண்டு துரைசாமி வீட்டில் கட்டிட வேலை செய்து வந்துள்ளனர்.
அப்போது வீட்டை சுத்தம் செய்யும் பொழுது வீட்டின் சன் சைடு லாப்டில் கிழிந்த சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அந்த சூட்கேசை நகர்த்த முடியாமல் எடை அதிகமாக இருந்ததால் சூட்கேஸில் கிழிந்த இடத்திற்குள் கையைவிட்டு பார்த்துள்ளனர். ராதாகிருஷ்ணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவருக்கும் அப்போது இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது போல் கை நிறைய பணம் வந்துள்ளது. உடனே பணம் எடுத்தது வரை போதுமென சுமார் 32 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
அந்த பணத்தை இருவரும் பாதி பாதியாக எடுத்துக்கொண்டு சதீஷ் ஊரைவிட்டு தலைமறைவாகியுள்ளார். சந்தேகம் வராமல் இருக்க ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அங்கேயே பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் திருப்பூருக்கு வந்த சதீஷ் மீண்டும் ராதாகிருஷ்ணன் உடன் இணைந்து துரைசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த இந்த சூட்கேஸ் அதே இடத்தில் அப்படியே இருந்துள்ளது. இதைக்கண்ட இருவரும் வெளியே சென்று தனது சகோதரன் மற்றும் நண்பரான தாமோதரன், சக்தி ஆகிய 2 பேரை சேர்த்து நான்கு பேரும் ஒன்றாக மீண்டும் திருடிச் சென்றுள்ளனர்.
அப்போது திருடப்பட்ட பணத்தை நான்கு பேரும் பிரித்துக்கொண்டு சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்று நான்கு வீடுகள், ஒரு இடம், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்தையும் வாங்கி வாழ்ந்து வந்துள்ளனர். 2022 ஜனவரி மாதம் பழைய வீட்டிற்குச் சென்ற துரைசாமி வீட்டைச் சுற்றிப் பார்க்கும் போது பணம் வைக்கப்பட்டிருந்த பழைய சூட்கேஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே துரைசாமி திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அதுவும் ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு சவரன் நகைகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து கிடப்பில் இருந்த இந்த வழக்கை கடந்த சில மாதம் முன்பு புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளர் ஜமுனா மீண்டும் இந்த வழக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டதில் 4 பேரை கைது செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடித்து விசாரணை செய்ததில் அந்த வீட்டில் இரண்டு முறை திருடியதாகவும் ஒரு முறை 32 லட்சம் ரூபாய் பணம் எனவும் இரண்டாவது முறை சூட்கேஸ் நிறைய இருந்த பணத்தை திருடிச் சென்றாதாக கூறி காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். பின்னர் திருடிய பணத்தில் வாங்கிய திருப்பூர் வீரபாண்டி, கணபதி பாளையம், மங்கலம் ரோடு, ஆகிய இடங்களில் வீடுகளை வாங்கியுள்ளனர். மேலும் கார், இருசக்கர வாகனம் என சுமார் 2.75 கோடி மதிப்பிலான ஆவணங்கள், பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் துரைசாமி வீட்டில் திருடு போன உண்மையான மதிப்பு குறித்து புகார் கொடுக்காமல் மறைத்தது ஏன் ?
வரி ஏய்ப்பு செய்து மறைக்கப்பட்ட பணமா ? என காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.