வைரலாகும் இராணுவ வீரரின் வீடியோ… முதலமைச்சர்,டிஜிபிக்கு கோரிக்கை..!
இந்திய ராணுவத்தில் காஷ்மீர் துணை ராணுவப் படையில் பணியாற்றும், திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோருக்கு கண்ணீர் மல்க காணொளி ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
முசிறி வட்டம் பேரூர் கிராமத்தில் தனது வயதான தாய், தந்தை மற்றும் மனைவி, மகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். நான் கடந்த 12 ஆண்டுகளாக துணை ராணுவப் படையில் பணியாற்றி வருகிறேன். நேற்று மதியம் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் எனது மனைவியின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.
நாங்களே வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை தான் சொந்த ஊருக்கு விடுமுறையில் வருகிறோம். அதிலும் இரயில் பயணங்களிலேயே ஐந்து நாட்கள் கழிந்து விடுகிறது. மீதி நாட்களில் நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கிறோம். இந்நிலையில் எங்கள் குடும்பத்திற்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் நாங்கள் எப்படி நிம்மதியாக இராணுவத்தில் வேலை பார்க்க முடியும்.
தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இந்த காணொளியை பார்த்ததும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.