பறவைகளின் தாகம் தீர்க்கும்
தம்பதியர்..!
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!”
மனிதர்கள் பற்றிக் கூட கண்டுகொள்ளாத இந்த உலகத்தில் பறவைகளின் உயிரைக் காக்க பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர் திருச்சி தம்பதியர்.
இதுகுறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் சகிதமாக பேசுகையில்,
கோடை வெயில் என்றால் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம். உஸ்… அஸ்…. என அலுத்துக்கொள்வோம். அந்த அளவுக்குக் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும். காலநிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது. வெயிலின் தாக்கம் கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தமுறை அதிகமாக உள்ளது. மனிதர்களால்கூடத் தாங்க முடியாத வெப்பம் சின்னஞ்சிறு பறவைகளை மட்டும் எப்படி விட்டுவைக்கும். இந்த கோடை வெயிலின் தாக்கம் பறவைகள், விலங்குகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது. உணவில்லாமல் கூட வாழலாம். ஆனால் நீரின்றி வாழ முடியாது. அவ்வகையில் பறவைகளை காப்பாற்றுவதற்கான சிறிய முயற்சிகள்தான் பறவைகளுக்குத் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் தொட்டி வைத்துள்ளோம்.
“நீர் இல்லாமல் பல பறவைகள் தண்ணீர் தேடி அலைவதை நாங்கள் நேரடியாகப் பார்க்கிறோம். காக்கா, மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி போன்றவை குடி நீர் அருந்துகின்றன.
பறவைகள் மூழ்கி குளித்து உடல் சூட்டைத் தனித்துக் கொள்ளும் வகையில் தண்ணீர் தொட்டி அமைத்து உள்ளோம். தண்ணீர் தொட்டியினை தினசரி தூய்மை செய்து ஒவ்வொரு நாளும் புதிதாக தண்ணீர் நிரப்பி வருகிறோம்.
கோடை வெப்பம், அனைத்து உயிர்களையுமே தாக்கக்கூடியது. அதையுணர்ந்து நாம் நமக்குத் தேவையான தற்காப்புகளைச் செய்துகொள்கிறோம். விலங்குகளும் அவற்றுக்குத் தகுந்தவாறு தகவமைப்பு முறைகளைக் காலம் காலமாகக் கையாண்டு வந்தன. தற்போதும் அவை அதையே செய்கின்றன. ஆனால், அதற்குத் தேவைப்படும் அளவுக்குப் போதுமான வாழிடத்தையோ வளங்களையோ நாம் விட்டு வைக்கவில்லை. இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல பல் உயிர்களுக்கும் தான். அந்தக் கடமையை உணர்ந்து, பறவைகளின் உயிரைக் காக்கச் சிறிய முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம் என்றனர் தம்பதியர் சகிதமாக.