ஆபத்தான ஆலைக்கு முறைகேடாக அனுமதி ?
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே இயங்கி வரும் மருத்துவக் கழிவு ஆலையைச் சுற்றி 150 மீட்டரில் நீர்நிலைகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அங்கு 500 மீட்டர் வரை நீர்நிலைகளே இல்லை என முன்னாள் வட்டாட்சியர் சான்று வழங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காரியாப்பட்டி அருகே அ.முக்குளம் கிராமத்தில் ராம்கி மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனமும் அதன் மற்றொரு கிளை நிறுவனமான தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனமும் இயங்கி வருகின்றன. இங்கு மதுரை, தேனி, விருதுநகர், ராம்நாடு, உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்து பாட்டில்கள், மனித உறுப்பு கழிவுகள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல் தென்மாவட்ட தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அபாயகரமான திட கழிவுகள் உள்ளிட்டவையும் சேகரிக்கப்பட்டு சுத்திகரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த இரு நிறுவனங்களையும் சுற்றி 500 மீட்டர் பரப்பளவில் நீர் நிலைகளோ குடியிருப்புகளோ இல்லை என கடந்த 2013ஆம் ஆண்டு திருச்சுழி தாசில்தாராக இருந்த புருஷோத்தமன் என்பவர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சான்றளித்திருக்கிறார். ஆனால் அந்நிறுவனங்களைச் சுற்றி நீர்நிலைகள் இருப்பதாகவும் அதனை நில அளவையர் மூலம் அளக்க வேண்டும் என்றும், அவ்வாறு அளக்கும் போது அதனை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் அ.முக்குளம் மற்றும் ஆவாரங்குளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து வழக்கறிஞர் ஒருவர் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தற்போதைய திருச்சுழி வட்டாட்சியர் பாண்டி சங்கர்ராஜிடம் மனு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 22ஆம் தேதி அ.முக்குளம் பகுதிக்கு வந்த வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், நில அளவையில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்திலேயே பல நீர்நிலைகள் இருப்பது உறுதியானதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
புகாருக்குள்ளான முன்னாள் வட்டாட்சியர் புருஷோத்தமனை தொடர்புகொள்ள முடியாத நிலையில், இதுகுறித்து தற்போதைய வட்டாட்சியரிடம் கேட்டபோது, ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.
ஊருணிகள், கண்மாய்களுக்கு அருகிலேயே அபாயகரமான கழிவுகள் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க அனுமதி அளித்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தத் தொழிற்சாலைகளில் கழிவுகள் எரிக்கப்படுவதன் மூலம் வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் கழிவுநீரால் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாவதாகவும் அதனால் ஆலையை மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நீதிராஜபாண்டியன்