பாமகவின் தனி இட ஒதுக்கீடு போராட்டம் : வாக்குவங்கியா, சமூகநீதியா?
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸை, முதல்வர் எடப்படி பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
முதல்வரைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்புமணி,
“ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்து உங்கள் கோரிக்கையைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களைச் சந்தித்து எங்களின் கோரிக்கையை நாங்கள் சொன்னோம். உடன் துணை முதல்வரும் இருந்தார். இந்தக் கோரிக்கை ஏதோ ஒரு சாதிப் பிரச்னை இல்லை. யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. எந்த அமைப்புக்கும், சமுதாயத்துக்கும், அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் கிடையாது.
இது ஒரு சமூகநீதிப் பிரச்னை. இதைத் தமிழகத்தின் வளர்ச்சிப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். இந்தச் சமூகம் முன்னேறினால்தான், தமிழகம் முன்னேற்றம் அடையும் என்றெல்லாம் பேசியிருக்கிறோம். முதல்வரும் அதைக் கேட்டுக்கொண்டு, ‘நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுக்காலமாக ஒரு நியாயமான கோரிக்கைக்காக நாங்கள் போராடிவருகிறோம். இன்றளவும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை’’ என்று கருத்து தெரிவித்தார்.
ஆனால், பா.ம.க தற்போது இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கான பேரத்தை அதிகப்படுத்தவே என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. போராட்டத்தில் நடந்த பல சம்பவங்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்‘’ என வன்னியர் சங்கம் எனும் அமைப்பைத் தொடங்கி போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பை மருத்துவர் ராமதாஸ்தான் தலைமையேற்று நடத்தினார். ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் 1987-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஒருவாரத் தொடர் சாலை மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்த்தது. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், 21 பேர் பலியானார்கள்.
தொடர்ந்து, தமிழக முதலைமைச்சர் எம்.ஜி.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் மனைவி ஜானகி முதலமைச்சர் ஆன பிறகு அவருடன் பேச்சுவார்த்தை, கவர்னர் அலெக்ஸாண்டரிடம் கோரிக்கை, பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை, குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனிடம் கோரிக்கை எனப் பலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டும், அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. 1989-ல் நடந்த நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான கருணாநிதி, வன்னிய சமூகத்துடன் சேர்த்து 108 சமூகங்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்கான மொத்த இட ஒதுக்கீட்டான 50 சதவிகிதத்திலிருந்து தனியாக 20 சதவிகிதத்தைப் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனத் தனிப்பிரிவை உருவாக்கினார். இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தபோதும், மருத்துவர் ராமதாஸ், மிகக்கடுமையாக விமர்சித்தார். அதே காலகட்டத்தில்தான், பாட்டாளி மக்கள் கட்சியையும் தொடங்கினார். வன்னியர் சமூகத்துக்கு கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாகவே கருதினாலும், பின்னாளில் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்தினார் ராமதாஸ் என்பதும் கவனிக்கத்தக்கது.
மாநிலத்திலும் மத்தியிலும் கூட்டணியில் இருந்துகொண்டு, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற்றபோதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அதுவும் தேர்தல் நேரத்தில், இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது தேர்தல் பேரத்துக்காகத்தான். தவிர, வன்னிய மக்கள் சமீபகாலமாக பா.ம.க-விலிருந்து தி.மு.க-வின் பக்கம் திரும்பி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். அந்த வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்வதற்காகத்தான் இந்தப் போராட்டம்‘’ என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பல அமைப்புகளே இந்தக் குற்றச்சாட்டுகளை வலுவாக முன்வைக்கின்றன.
அதேபோல, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களை சென்னைக்குள் வரவிடாமல் காவல்துறையினர் சென்னை புறநகர்ப் பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி முன்னேறிச் செல்ல முற்பட்டனர். அதோடு, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கி ரயிலைத் தடுத்து நிறுத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அது, பொதுமக்களிடையே மிகுந்த எதிர்மறையான பிம்பத்தையே உருவாக்கியது.
எண்பதுகளில் மருத்துவஸ் ராமதாஸ் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தபோது, பல முற்போக்கு இயக்கங்கள் அவரின் போராட்டங்களை ஆதரித்தன. மருத்துவர் ராமதாஸும் மிகப்பெரிய போராளியாகத்தான் பார்க்கப்பட்டார். ஆனால், தற்போது அவரின் கடந்தகால அரசியல் செயல்பாடுகளாலும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்காமல் இப்போது கேட்கிறார் என்பது போன்ற விமர்சனங்களாலும் அப்போதிருந்த அளவுக்கு இப்போது அவருக்கு மற்றவர்களின் ஆதரவு இல்லாமல், ஏன் மாற்றுக் கட்சிகளில் இருக்கும் வன்னியர்களின் ஆதரவே இல்லாமல் இருக்கிறது. “சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க தனி ஆணையம் அமைக்கப்படும்‘’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர் ராமதாஸ்,
“வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்போம் என்பது இந்த பிரச்னையைக் கிடப்பில் போடும் செயலாகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்‘’ என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
மறுபுறம்,“மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘’ என தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கடந்த காலத்தில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.