ரூ.30 லட்சம் பறித்த பெண் தாதா..! : கூலிப்படையுடன் சிக்கினார்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கையில் வாள் ஏந்திச் சென்று 30 லட்சம் ரூபாயை பறித்த பெண் தாதா தலைமையிலான கொலைவெறிக் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கஞ்சா ரவுடி முருகனின் மனைவி காளீஸ்வரி, கஞ்சா வழக்கில் முருகன் ஜெயிலில் இருக்கும் நிலையில் காளீஸ்வரி கூலிப்படை கும்பலை வழி நடத்தியதாக கூறப்படுகின்றது.
இரு சக்கரவாகனத்தில் 10க்கும் மேற்பட்ட கூலிப்படையினருடன் கையில் வாள் ஏந்தியபடி வலம் வந்த பெண் தாதா காளீஸ்வரி அங்கு மணல் குவாரி நடத்துவோரிடம் இருந்து தலா 10 லட்சம் ரூபாய் வீதம் 3 இடங்களில் 30 லட்சம் ரூபாய் பறித்ததாக கூறப்படுகின்றது.
அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரிடம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக புகார் வந்ததை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அரிவாள், வாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனது எதிரியை கொலை செய்யும் திட்டத்துடன் புறப்பட்டுச்சென்ற காளீஸ்வரியையும் அவரது கூலிப்படையை சேர்ந்த 10 பேரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் இருந்து கடப்பாரை, 11 வாள் கத்தி உள்ளிட்டவற்றையும் அவர்களது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 கிலோ கஞ்சாவையும் போலீசார் கைபற்றினர்.
தாதா காளீஸ்வரி தனது இடுப்பில் அறுப்பு கத்தி ஒன்றை சொறுகி வைத்திருந்தார் அதனையும் போலீசார் கைப்பற்றினர். மணல் குவாரியில் மிரட்டிப் பறித்த பணத்தை கொண்டு கஞ்சா வாங்கியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து பெண் தாதா காளீஸ்வரி உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வேறு வேறு பகுதியை சேர்ந்த இந்த கூலிப்படை ரவுடிகள் ஜெயிலில் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக கஞ்சா முருகனின் திட்டப்படி ஒரே கும்பலாக கூட்டு சேர்ந்து காளீஸ்வரியின் எதிரியை பழிவாங்க புறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
- நமது நிருபர்