அரசியல்
செம டான்ஸ் போட்ட தமிழக அமைச்சர்; பிரச்சாரத்திற்கு இடையில் உற்சாகம்!
தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இதற்காக வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இருப்பினும் அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி:
- 12 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
- முத்தமிழ்ச்செல்வன் – அதிமுக
- புகழேந்தி – திமுக
- கந்தசாமி – நாம் தமிழர் கட்சி
இவர்களுடன் 9 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் எதிர்க்கட்சிகள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அதிமுக முன்வைத்து வருகின்றது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மேள, தாளங்கள் மற்றும் நடனத்துடன் அவரை வரவேற்றனர். இதனால் உற்சாகமடைந்த கருப்பணன், தானும் நடனமாட தொடங்கினார். அவருடன் கிராம மக்கள் சிலரும் சேர்ந்து கொண்டதால் நடனம் களைகட்டியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.