என் உயிருக்கு ஆபத்து உள்ளது : வனிதா விஜயகுமார்
சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு உள்ளது. இதை அவரது மகள் வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பு நடத்தினார். குறிப்பிட்ட கால படப்பிடிப்புக்கு பின்னரும் அவர் அந்த வீட்டை காலி செய்யாமல் அங்கேயே தங்கினார்.
இதுகுறித்து விஜயகுமார் மதுரவாயல் போலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடிகை வனிதா மற்றும் அவரது நண்பர்களை வெளியேற்றினர். அப்போது, வனிதாவின் நண்பர்கள் தகராறு செய்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், பாதுகாப்புக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வனிதா மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வனிதாவுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வீட்டிற்குள் நுழைய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறி நடிகை வனிதா தனது வழக்கறிஞர்களுடன் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் நுழைந்தார்.
இதற்கிடையில், நடிகர் விஜயகுமார் மதுரவாயல் போலிஸ் நிலையத்தில் மீண்டும் புகார் செய்தார். அதில், ‘‘நீதிமன்ற உத்தரவு என கூறி மகள் வனிதா அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி உள்ளார். எனவே அவரை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து வனிதாவை போலிஸார் வீட்டை விட்டு வெளியேற்றி விஜயகுமாரின் வீட்டைப் பூட்டினர். பின்னர் வனிதா மீது அத்துமீறி நுழைதல், சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரை, போலிஸ் நிலையம் அழைத்துச்சென்று, பின்னர் பிணையில் விடுவித்தனர்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி நடிகை வனிதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
இதுபற்றி விஜயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க. நான் வேற என்ன சொல்றது? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே இதைப் பத்தி பேட்டியெல்லாம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லைங்க’’ என்று வருத்தமாகச் சொன்னார்.
வேப்பேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த வனிதா விஜயகுமார் கூறும்போது.
நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் என்னை போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். நான் யாருக்கு என்ன தவறு செய்தேன். என்னுடைய சொந்த வீட்டில் என்னுடைய அம்மா வீட்டில் இருக்க கூட என்னால் முடியவில்லை. எனது தந்தையே என் மீது புகார் கொடுத்து என்னை ஊடகத்தின் மத்தியில் மானபங்கப்படுத்தி உள்ளார். என்னுடைய குழந்தைகள் கூட என்கூட இருக்கிறார்கள் அவர்களை பேத்தி என்று கூட பார்க்காமல் இப்படி ஒரு சித்திரவதை செய்கிறார்கள். நான் எப்பொழுது டாடி என்று படத்திற்கு பெயர் வைத்தேன் என்று தெரியவில்லை. இந்த அளவிற்கு ஒரு தந்தை பெற்ற மகளை டார்ச்சர் செய்வது மக்களெல்லாம் பார்க்கும்படி ஊடகத்தின் முன் தொந்தரவு செய்வது யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். எவ்வளவு முறை வீட்டிற்கு சென்றாலும் நாயை அடிப்பது போல் அடித்துத் துரத்துகிறார்கள்.நீதிமன்றத்தில் உத்தரவை வாங்கினாலும் இப்படித்தான் நடக்கிறது என்றார் கண்ணீர் மல்க.