தமிழகம்

திருப்பூரில் ஊடகத் துறையில் ஊடுருவும் கொலையாளிகள்..! போலி ஊடகத்துறையினரை கட்டுப்படுத்த தவறியதா காவல்துறை.?!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்குரோடு அருகே குமார் என்பவருக்கு சொந்தமான தனியார் வேலைவாய்ப்பு (பர்பெக்ட் லேபர் சொல்யூசன்) நிறுவனம் உள்ளது.திருப்பூர், அவினாசி,பல்லடம் பேருந்து நிலையங்கள் மற்றும் திருப்பூர் ரயில் நிலையத்தில் வேலை தேடி வந்து இறங்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்தவர்களை குறிவைத்து ஏஜென்டுகள் மூலம் அழைத்து வந்து பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்த்து விடுவது இவர்களது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களான ராஜ்குமார் 22, அவரது தம்பி பிராஜூ லால் 19, ஆகிய இருவரும் வேலை தேடி திருப்பூர் ரயில் நிலையம் வந்து இறங்கி உள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஏஜென்டுகள் சிலர் அவர்கள் இருவருக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி பல்லடத்தில் உள்ள குமாருக்கு சொந்தமான வேலைவாய்ப்பு நிறுவனத்தில் கொண்டு வந்து விட்டதாக கூறப்படுகிறது. அந்நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி இருந்த சகோதரர்கள் இருவரையும் நேற்று நள்ளிரவு தென்மாவட்டம் ஒன்றிற்கு வேலைக்காக அந்நிறுவன ஊழியர்கள் அனுப்ப முயன்றதாக கூறப்படுகிறது.இதற்கு மறுப்பு தெரிவித்த வடமாநில சகோதரர்கள் இருவருக்கும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள் 4 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வேலைவாய்ப்பு நிறுவன ஊழியர்கள், சகோதரர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியதாகவும் அதில் வடமாநில வாலிபர் ராஜ்குமார் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர்கள் நான்கு பேரும் நிறுவனத்திற்குச் சொந்தமான பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சொகுசு வாகனத்தில், அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு பல்லடம் மங்கலம் சாலையில் 63 வேலம்பாளையத்திலிருந்து சின்ன காளிபாளையம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் அவர்களை விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அவ்வழியே சென்ற சிலர் இன்று காலை சாலையோரம் வடமாநில வாலிபர் உடல் கிடப்பது கண்டும் அதன் அருகில் மற்றொரு வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் நின்றுகொண்டு அழுது புலம்பியதையும் பார்த்துள்ளனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பல்லடம் டி.எஸ்.பி வெற்றிச்செல்வன் தலைமையில் மங்கலம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு உயிரற்ற நிலையில் உடல் முழுக்க காயங்களுடன் இறந்து கிடந்த வட மாநில வாலிபரது உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உடலில் காயங்களுடன் நின்று அழுது கொண்டிருந்த மற்றொரு வாலிபரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் பல்லடம் மங்கலம் சாலையில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சொகுசு வாகனம் ஒன்று மங்கலம் நோக்கி வந்ததும் சிறிது நேரத்தில் அந்த வாகனம் திரும்பி பல்லடம் நோக்கி சென்றதும் பதிவாகி இருந்ததை கண்டு அந்த வாகனம் குறித்த விவரங்களை சேகரித்தனர்.அதில் அந்த வாகனம் பல்லடம் நான்கு ரோட்டில் உள்ள தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் தாங்கள் சொன்ன இடத்திற்கு வேலைக்கு செல்ல மறுத்ததால் ஆத்திரம் அடைந்து வடமாநில வாலிபர்களை தாக்கியதாகவும் அதில் ஒருவர் மயங்கி சுருண்டு விழவே அவர்கள் இருவரையும் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மங்கலம் அருகே காட்டுப் பகுதியில் இறக்கி விட்டு வந்ததையும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் புதுக்கோட்டையைச் சேர்ந்த நிர்மல் 35,கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் 25, கிருஷ்ணகிரியை சேர்ந்த முகமது சுபேர் 35, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விஜய் பாலாஜி 34, ஆகிய 4 பேரும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து மங்கலம் போலீசார் அவர்கள் நால்வரையும் கைது செய்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் உள்ளூர் மக்களை மட்டுமின்றி பல்லடத்தில் தங்கி வேலைவாய்ப்பு பெற்றுள்ள வடமாநில மற்றும் தென்மாவட்ட தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் திருப்பூர் ஊடகத்தில் ஊடுருவியுள்ள கொலையாளிகள் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் கொலை செய்யலாம் என்கிற தைரியம் எங்கிருந்து வந்தது. ஏன் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவோர் மீது காவல்துறை நடக்க தவறியதா? என்கிற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் இனி வரும் காலங்களில்.போலி ஊடகதாரிகளை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button