போதையில் போலீசுக்கு போன் செய்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
திருப்பூர் அருகே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட போதை ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அக்கநாயக்கன் பாளையத்தில் மாலை பள்ளி முடிந்து மாணவிகள் வீடு திரும்பிகொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் மிதமிஞ்சிய போதை ஆசாமி நடந்துசென்ற பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் போதை ஆசாமியை பிடித்து விசாரித்தபோது கரைப்புதூர் எம்.ஏ.நகரை சேர்ந்த பிரசாந்த் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து துரத்திவிட்டனர். பின்னர் பிரசாந்த் தன்னை சிலர் தாக்கியதாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தகவல் தந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரித்த போது மாணவிகளிடம் அத்துமீறி நடந்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பிரசாந்தை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்காக போலீசார் பிரசாந்தை காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். போதையில் மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததோடு தன்னை சிலர் தாக்கிவிட்டதாக நாடகமாடி போலீசில் போதை ஆசாமி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.