தமிழகம்

உடுமலையில் வனச்சரக அதிகாரிகளின் சித்திரவதையால் பழங்குடியின அப்பாவி மரணம் !

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து வயது (48)‌.  இவர் முதுவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த விவசாயி ஆவார். இவரது மனைவி பெயர் பாண்டியம்மாள், மகள் பெயர் சிந்து திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலைக்கு மேலே உள்ள குருமலையை சேர்ந்தவர்கள். மாரிமுத்து மற்றும் சிலருக்கும் விவசாய நிலம் தொடர்பாக வனத்துறையை சேர்ந்த காவலர்களுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, அவர் மீது கஞ்சா பயிரிட்டதாக கூறி பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடந்த  2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்து பிணை கிடைத்து வெளியே வந்த பின்பு, வனத்துறையின் தொடர் தொந்தரவுகள் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பே கேரளா மாநிலம் மூணாறுக்கு சென்று குடியேறி உள்ளனர். மூணாறு பகுதியில் மாரிமுத்துவின் மனைவி பாண்டியம்மாள் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

சுமார் 8, ஆண்டுகள் கழித்து கஞ்சா வழக்கு சம்பந்தமாக  29.7.2025 அன்று, உடுமலை நீதிமன்றத்தால் மாரிமுத்து குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரது வழக்கறிஞர் சுப்பிரமணியம் என்பவரின் அழைப்பின் பேரில் 30.7.2025 அன்று உடுமலைப்பேட்டை நீதிமன்றத்திற்கு வருகை தந்து கையொப்பமிட்டு வழக்கறிஞரை சந்தித்து விட்டு மதியம் சுமார் 2 மணியளவில் கேரளா செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்து மூணாறு பகுதியில் உள்ள சூரிய நெல்லிக்கு மனைவியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது மதியம் சுமார் 3 மணியளவில் சின்னார் வனச் சோதனைச் சாவடியில் பேருந்தில் இருந்த மாரிமுத்துவை புலிப்பல் வைத்திருந்ததாக கூறி வனத்துறை காவலர்களால் கட்டாயப்படுத்தி பேருந்தை விட்டு இறக்கி தங்களது காவலுக்குள் கொண்டு வந்துள்ளனர். பேருந்தில் இருந்து இறக்கிய உடனே எந்தக் காரணமும் இன்றி மாரிமுத்து கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
30.7.2025 அன்று இரவு சுமார் 11 மணியளவில் உடுமலை வனச்சரகத்திற்கு மாரிமுத்து அழைத்துச் செல்லப்பட்டு, வனச்சரக அலுவலகத்தில் வைத்து மீண்டும் வனத்துறை ஊழியர்களால் தொடர்ந்து கடுமையான விசாரணை என்ற பெயரில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

31.7.2025 அன்று  அதிகாலை சுமார் 4 மணியளவில், மாரிமுத்து, வனச்சரக அலுவலகத்தின் கழிப்பறையில் உள்ள “குளியல் ஷவர் கம்பியில்” அவரது லுங்கியால் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக வனத்துறை ஊழியர்கள் தெரிவிக்கிறனர்.  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வனத்துறை ஊழியர்களே மாரிமுத்துவின் உடலை அங்கிருந்து கழற்றி தரையில் படுக்க வைத்துள்ளனர்.
சின்னார் வன சோதனை சாவடியில் மாரிமுத்துவை கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி கட்டாய விசாரணைக்கு உட்படுத்திய வன காவலர்கள் மாரிமுத்துவின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

மேலும், மாரிமுத்து பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலை காவல்துறைக்கு மிகவும் தாமதமாக தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை ஊழியர்களே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக சொல்லப்படும் மாரிமுத்துவின் உடலை இறக்கி கீழே வைத்துள்ளனர். மாரிமுத்து இறந்த தகவலை தெரிந்து உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்குச் சென்ற குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரை, வனத்துறை ஊழியர்களால்
பாத்ரூமில் கீழே படுக்க வைத்திருந்த மாரிமுத்து உடலை பார்ப்பதற்கு அனுமதிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், மாரிமுத்துவின் கைகளில் இருந்த காயங்கள், கழிப்பறையின் உயரம், அவர் அணிந்திருந்த லுங்கி போன்றவை சந்தேகங்களை மேலும் வலுப்படுத்துகின்றன.

இந்த சம்பவங்கள் குறித்து தடயவியல் துறையும், காவல்துறையும் விசாரணை செய்து வரும் நிலையில்,  மாரிமுத்து மரணம் குறித்து உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் முதல்கட்ட விசாரணையை தொடங்கிய நிலையில், இயக்கங்கள் அரசியல் கட்சியினுடைய  அழுத்தத்தின் காரணமாகவே நீதிமன்ற நடுவர் விசாரணைக்கு காவல்துறை ஒப்புதல் கொடுத்துள்ளது.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவரை முறையற்ற காவலில் வைத்து சித்திரவதை செய்து, ஒரு போலியான வழக்கில் கைது செய்து ஜோடித்து வனத்துறையினர் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிய ஆதாரம் இல்லாமல் வனத்துறை காவலர்கள் மாரிமுத்துவை அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில், புலிப்பல் வைத்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதற்கு முன்பாக மாரிமுத்துவின் மீது போடப்பட்ட கஞ்சா வழக்கும் பொய்யான வழக்காக ஜோடித்து தான் சிறையில் அடைத்திருந்தனர். தற்போது மாரிமுத்து விடுதலையானது சில வனத்துறை அதிகாரிகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் மீண்டும் பொய்யான ஆதாரங்களை திரட்டி விசாரணை என்ற பெயரில் அழைத்து வந்து சித்ரவதை செய்து கொன்றுள்ளனர்.

மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணமான வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென சில அரசியல் கட்சிகள் கூறிவருவதோடு, காவல் நிலையத்தில் விசாரணை நடைமுறைகளை முறைப்படுத்த உயர் அதிகாரிகள் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும், மனித உரிமையை பாதிக்காத நடைமுறைகள் குறித்த பயிற்சியை அனைத்து காவலர்களுக்கும் வழங்கிட வேண்டும் என கூறப்படுகிறது.  மேலும், குற்றம் இழைக்கும் காவலர்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக வழங்குவதுடன், வனத்துறை மற்றும் காவல் நிலையத்திலோ, சிறைச்சாலையிலோ, இனியும் இதுபோன்ற மரணங்கள் நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளது.

மாரிமுத்துவின் மரணத்திற்கு நீதி கேட்டு நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக அரசு என்ன பதில் கூறப்போகிறது ?  வனத்துறை காவலர்களை பணியிலிருந்து நீக்கி கைது செய்து சிறையில் அடைக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிப்பாரா என்கிற கேள்வியும் அப்பகுதியினர் மத்தியில் எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button