கீழடி அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கீழடி அகழாய்வு குறித்து தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை தெரிவித்துள்ளது. மதுரையை அடுத்த கீழடியில், கடந்த 2013ல் துவங்கி அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 5,300 க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் அமர்நாத் திடீரென அசாம் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். மேலும் பெங்களூருவில் பாதுகாக்கப்படும் பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை அமர்நாத் தயாரிக்கக் கூடாது என்றும் பெங்களூரு தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டது.
இந்நிலையில் பெங்களூரு தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அறிக்கையை தயாரிக்கூடாது என்று கோரி மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழ் கலாச்சார பழமையை மறைக்கும் நோக்கில் அதிகாரிகள் உதவியுடன் மத்திய அரசு செயல்படுவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையடுத்து எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
முதல் இரண்டு கட்ட அகழாய்வில் 2300 வருடங்கள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என ஆய்வில் தெரிய வந்துள்ளது என்றும், மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்கள் சோதனைக்கு அனுப்பபட்டிருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனைக்கான முடிவுகள் ஆறு மாதங்களுக்குப் பிறகு வரும் என்றும் மத்திய தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கீழடி அகழ்வாய்வின் முழு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் ஏழு மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.