மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வழக்கமாக நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் சமீபகாலமாக நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி மாற்றுத்திறனாளிகளின் இன்னல்களை உணர்ந்து மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்தி அவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை இணையதளம் மூலமாகப் பெற்று ஆய்வு செய்து அவர்களை நேரில் வரவழைத்து குறைகளை கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 27800/- மதிப்பிலான 10 விலையில்லா காதுகேட்புக் கருவிகள் மற்றும் மயிலாப்பூர் தனி வட்டாட்சியர் அலுவலகம் சார்ந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகைக்கான ஆணையை வழங்கியுள்ளார். மேலும் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடையின்றி சென்றடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசால் வழங்கப்படும் சலுகைகள் சிறப்புத் திட்டங்களுக்கான கையேடுகளை மாவட்ட ஆட்சியர் மனுதாரர்களுக்கு வழங்கியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கனிவோடு கேட்டறிந்து, உதவிய சென்னை மாவட்ட ஆசிரியர் விஜயராணி ஐஏஎஸுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.