தமிழகம்

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை… : முதல்வர் பழனிசாமி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக விவசாயிகள் அதைப் பாராட்டுகிறார்கள். கரூரில் என் அழைப்பை ஏற்று வந்த பல விவசாயப் பிரதிநிதிகளும் அதைப் பாராட்டவே செய்கிறார்கள்.

“தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படவிருப்பதாக வெளியாகும் தகவலில் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி இருக்கிறது. விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை. நான் விவசாயி என்று மு.க.ஸ்டாலின் எனக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசினார்.

கரூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை அறிவிக்கவும், நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவும், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். ஏற்கெனவே, கரூர் மாவட்டத்துக்கு இரண்டு முறை முதல்வர் வருகை தருவதாகத் தேதி அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களால் அவரது வருகை ரத்தானது. இந்தநிலையில், முதலமைச்சர் கரூர் வருகை தந்தார். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்திலிருந்து கரூர் பேருந்து நிலையம் வரை திறந்த ஜீப்பில் வருகை தந்தார்.

அவரோடு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உடன் இருந்தனர். அதன் பிறகு, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். கரூர் மாவட்டத்தில் ரூ. 627 கோடியிலான, 2,089 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதேபோல், ரூ.118.53 கோடியில் முடிவுற்ற 28 திட்டங்களைத் தொடங்கிவைத்து, ரூ.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் பிறகு, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா ஆய்வுப் பணியையும் மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி, பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் முகாம்களில் பரிசோதனை செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் மக்கள் கொரோனாவை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கத்தான் நகராட்சிக்குள் திறந்த ஜீப்பில் வந்தேன். ஆனால் பலரும் கொரோனா குறித்த அச்சம் இன்றி, முகத்தில் மாஸ்க் அணியாமல் செல்வதைப் பார்த்தேன். கொரோனா ஒரு மோசமான வியாதி. மக்கள் விழிப்புணர்வுடனும், பாதுகாப்போடும் இருந்தால்தான் அதை முற்றிலும் ஒழிக்க முடியும். பல வெளிநாடுகளில் இடையில் குறைந்த கொரோனா தொற்று, இப்போது மறுபடியும் அதிகரித்திருக்கிறது. அங்கெல்லாம் மறுபடியும் லாக்டௌன் அறிவித்திருக்கிறார்கள். அதனால், மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் இலவசமாக விநியோகம் தொடங்கும். கரூர் மாவட்டத்தில் 4,000 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு பொதுமக்களைத் தேடிச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்று நிறைவேற்றிவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்த கட்சிகள், கூட்டணியில் தற்போதும் தொடர்கின்றன. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படவிருப்பதாக வெளியாகும் தகவலில் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி இருக்கிறது. விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை.

அம்மாவின் அரசு, தமிழக விவசாயிகளுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது. நான் விவசாயி என்பது, எங்கள் ஊர் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். இதில், நான் விவசாயி என்று மு.க.ஸ்டாலின் எனக்குச் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று வேளான் சட்ட மசோதாக்களில் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழக விவசாயிகள் அதைப் பாராட்டுகிறார்கள். கரூரில் என் அழைப்பை ஏற்று வந்த பல விவசாயப் பிரதிநிதிகளும் அதைப் பாராட்டவே செய்கிறார்கள்.

இந்த விஷயத்தில், ஏஜென்ட்டுகளின் நலன்களுக்காக விவசாயிகளை எதிர்க்கட்சியினர் தவறாக வழிநடத்துகின்றனர். அப்படி இதை விமர்சிக்கும் எதிர்கட்சிகள், வேளாண் சட்டம் தொடர்பான மூன்று சட்டங்களில் தமிழக விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள் என்னென்ன என்று கூற முடியுமா? வேளாண் சட்டங்களிலுள்ள பாதகமான அம்சங்களை சொல்லுமாறு கேட்டால், எதிர்க்கட்சிகளிடம் பதில் இல்லை.

நீட் தேர்வை நாங்கள் கொண்டுவரவில்லை. 2010-ம் ஆண்டு தி.மு.க., காங்கிரஸோடு கூட்டணிவைத்திருந்தபோதுதான், நீட் செயல்படுத்தப்பட்டது. ஆனாலும், நான் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் என்பதால், அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களையும் மருத்துவராக்க வேண்டும் என்பதற்காகவும், நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். இதை எதிர்க்கட்சி கேட்கவில்லை, மக்கள் கேட்கவில்லை. நாங்களாக முயன்று கொண்டு வந்தோம். கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு தயார். ஆனால், இங்குள்ள ஒருவர் நீதிமன்றத்தில் அந்தப் பிரச்னையைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். அப்புறம் எப்படி நாங்கள் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியும்?” என்றார்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button