பெண் மீது சரமாரி தாக்குதல் ! தாக்குதல் நடத்திய இளைஞருக்கு ராஜ மரியாதை கொடுத்த காவல்துறையினர் !
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் இடத்தகராறில் பெண் மீது தாக்குதல் நடத்திய இளைஞரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காத பரமக்குடி நகர் காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதியினர் கூறுகையில்… காட்டு பரமக்குடி கீழத்தெருவில் உள்ள ராமமூர்த்தி என்பவரின் மகன் பாலமுரளி கிருஷ்ணன், தனது வீட்டின் அருகே மீனா என்பவரின் மகள் நாகஜோதியை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நாகஜோதி அந்த இடத்திலேயே மயக்கமடைந்து கீழே சரிந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதும், பரமக்குடி நகர் காவல்துறையினர் நாகஜோதி சிகிச்சை பெற்று, சுயநினைவு திரும்பியதும், வாக்குமூலம் பெற்று புகார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையினர் பாலமுரளி கிருஷ்ணனை அழைத்து விசாரணை செய்தது போல், அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாகஜோதி கடுமையான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தாக்குதல் நடத்திய நபர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் பாலமுரளி கிருஷ்ணன் இன்று தனது நண்பர்களுடன் இலங்கைக்கு உல்லாச பயணம் சென்றுள்ளார். அவர் இந்த பயணம் மேற்கொள்வதற்கு முன், பணம் செலவு செய்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்மீது யார் எங்கே புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என அருகில் உள்ளவர்களிடம் கொக்கரித்துவிட்டு சென்றுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான், பணம் இருப்பவர்களுக்கு ஒரு நியாயம் ! பணம் இல்லாத எளியவர்களுக்கு ஒரு நியாயமா ? பரமக்குடி நகர் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து போராட்டம் செய்வதோடு, முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.