போதையில் பாதை மாறிய “கிராம நிர்வாக அலுவலர்” ! கோலம் போடவேண்டிய இடத்தில் அலங்கோலமாக கிடந்ததால் பரபரப்பு…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போதை தலைக்கேறிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் போதையில் பாதை மாறி, வீட்டு வாசலில் மட்டையான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தை அடுத்த பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சி துணைத்தலைவராக இருந்து வருபவர் பாலசுப்பிரமணியம். மாதப்பூர் ஊராட்சிக்குட்பட்ட சிங்கனூர் செல்லும் சாலையில் தனி நபர்களுக்கு நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகந்நாதனை சந்தித்து முறையிட மதியம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு துணைத்தலைவர் சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் ஜெகந்நாதன் இல்லாததால் செல்போனில் தொடர்புகொண்ட துணைத்தலைவர் நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் கூறாமல் தகாத வார்த்தையால் பேசிய ஜெகந்நாதன் ஒருமையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஜெகந்நாதனைத் தேடிய துணைத்தலைவர் ஒரு வழியாக மேற்கு பல்லடத்தில் ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது பால சுப்பிரமணியம் அதிர்ச்சி அடைந்துள்ளார். போதை தலைக்கேறி வீட்டு வாசலில் அலங்கோலமாக ஜெகந்நாதன் கிடந்துள்ளார். அதன்பிறகு போதையில் பிதற்றிக்கொண்டிருந்த ஜெகந்நாதனை கூப்பிட்டும் பதில் வராததால் அங்கிருந்து பாலசுப்பிரமணியம் கிளம்பியுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து பேசிய மாதப்பூர் ஊராட்சி துணைத்தலைவர், கிராம நிர்வாக அலுவலர் பணி என்பது பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்ககூடிய மக்களால் மதிக்கக்கூடிய பணியாகும். புனிதமான இப்பணியின் முக்கியத்துவத்தை மறந்து, இது போன்று போதை தலைக்கேறி வாசற்படியில் ஜெகன்நாதன் கிடப்பது கேளிக்கூத்தாக்குவது போல் உள்ளது என தெரிவித்தார்.
மேலும் ஜெகன்நாதன் மாதப்பூர் ஊராட்சியிலும் பொறுப்பு வகிப்பதாகவும், இது போன்ற அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்போவதாக ஊராட்சி துணைத்தலைவர் தெரிவித்தார்.