சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக ஒளிர்ந்த வண்ண விளக்குகள்
ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெறும் போர் மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்துவருகிறது. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி செய்துவருகிறது.
இருப்பினும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியா போரில் ஈடுபடவில்லை. இருந்தாலும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உக்ரைன் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வண்ண விளக்குகளை ஒளிரவிட்டுள்ளது. இதுகுறித்த அமெரிக்க தூதரகத்தின் ட்விட்டர் பதிவில், ‘இந்தியாவின் அமெரிக்க தூதரகம் உக்ரேனிய கொடியின் வண்ணங்கள் ஒளிர ஆதரவாக நிற்கிறோம். உக்ரேனின் சுதந்திரம், இறையாண்மை, மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு உறுதியானது’ என்று தெரிவித்துள்ளது.