பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி : உயர் நீதிமன்றம் வேதனை
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரம் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் சுமார் 8,000 செய்தியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். உடல்நலம் பாராமல் பணிபுரிகின்றனர். இதனால் பலர் இளம் வயதிலேயே உயிரிழக்கின்றனர்.
செய்தியாளர்களுக்கு நல வாரியமும் இல்லை. இதனால் அவர்களுக்கான பாதுகாப்பு, சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உதவிகளை பெறுதல் ஆகியவற்றில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதால் பத்திரிகையாளர்களின் உயிருக்கு எப்போதும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் அமலில் உள்ளது. தமிழகத்தில் அதுபோன்ற சட்டம் அமலில் இல்லை. எனவே, தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி வாதிட்டார். அப்போது நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும்போது, ‘‘பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கான பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆகவே, பத்திரிக்கையாளர் நல வாரியத்தை அமைப்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க வேண்டும்.
அதே சமயம் பத்திரிகையாளர்களும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என்றனர். பின்னர் விசாரணையை மார்ச் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.