ஆவணங்கள் இல்லாமல் 19 ஏக்கர் நிலத்திற்கு பட்டா…?
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவடன் மேல்மட்டடத்தில் நியாயமான அதிகாரிகளை நியமித்து லஞ்ச லாவண்யம் இல்லாத அரசாக இந்த அரசாங்கம் செயல்படும் என்று விளம்பரப்படுத்திக் கொண்டது. ஆனால் உயர்அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள் கடந்த பத்து ஆண்டுகளாக செய்த தவறுகளையே இன்றும் தொடர்ந்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
வருவாய்த்துறை மூலம் தமிழக அரசுக்கு வருவாய் வருகிறதோ இல்லையோ வருவாய்த்துறை அதிகாரிகள் அதிக வருவாய் ஈட்டி வருமான வரித்துறை சோதனைகளுக்கு உட்படுவது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா தையூர் கிராமத்தில் சுமார் 19 ஏக்கர் நிலத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் திருப்போரூர் வட்டத்துணை ஆய்வாளர் ஆய்வுக்கு உட்பட்டு பட்டா வழங்கியதாக வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து இடத்தின் உரிமையாளரிடம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கியிருக்கிறார்கள். பட்டாவை பெற்றுக் கொண்ட நிலத்தின் உரிமையாளர்கள், அதிகாரிகள் நிர்ணயம் செய்த முழுத் தொகையை கொடுக்காததால் பட்டாவை ரத்து செய்திருக்கிறார்கள் என்கிற புகார் கடிதத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வருவாய் நில நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ளனர்.
இதுசம்பந்தமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை செய்ததில் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதாரண மக்கள் தகுந்த ஆதாரங்களுடன் அதாவது தந்தை இறந்தபின் இறப்புச் சான்றிதழுடன் வாரிசுகள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பித்தால் பலமாதங்கள் அலைந்து பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும். ஆனால் பணம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வராமலேயே ஒரு போன் பண்ணினால் அவர்கள் சொல்லும் வேலைகள் உடனடியாக நடக்கும். வேலையை முடித்தவுடன் அதிகாரிகளே அவர்களைத் தேடிச் சென்று பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்கிறார்கள். இந்த அலுவலகத்தில் தலைமை சர்வேயராக இருந்த இளங்கோ என்பவர் தான் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுப்பார். அவர் இங்கு பணிபுரிந்த காலத்தில் அவரால் அலைந்து சரிபார்க்கப்பட்டு பட்டா வழங்கியதாக இருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் சோதனை செய்தாலே பல மோசடிகள் வெளிவரும் என்கிறார்கள்.
தையூர் கிராமத்தில் 19 ஏக்கர் நிலத்திற்கு எந்தவிதத்தில் பட்டா வழங்கினார்கள்? ஏன் பட்டாவை ரத்து செய்தார்கள் என்பது யாருக்கும் இதுவரை தெரியவில்லை. தனிநபர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு சில லட்சங்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டு பட்டா வழங்குவதும் அதில் ஏதாவது பிரச்சனை வந்தால் அந்த பட்டாவை ரத்து செய்வதும் இவர்களது வாடிக்கை. இது சம்பந்தமாக புகார்கள் எழுந்ததும் உயர் அதிகாரிகளை சரி செய்து கணிணி தானாக இயங்கி பட்டா வழங்கியதாக விளக்கம் அளித்துள்ளார் வட்ட துணை ஆய்வாளர்.
ஏழைகளை பல மாதங்கள் அலையவிடும் அதிகாரிகளும் கணிணியும், பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தானாக இயங்கி எப்படி பட்டா வழங்கியிருக்கும் என்கிற சந்தேகத்தை கிளப்புகிறார்கள் அப்பகுதியினர். அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் மட்டும் நல்லாட்சி புரிய முடியாது.
தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் நேரடி தொடர்பில் இருக்கும் வட்டாட்சியர்கள் அனைவரையும் பணிமாறுதல் செய்து அவர்களை தீவிரமாக கண்காணித்து தவறுகளை தடுக்க வேண்டும். வருவாய்த்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் பணியில் சேரும்போது அவர்களுக்கு இருந்த சொத்து மதிப்பையும் தற்போது அவர்களின் பின்புலத்தையும் ஒப்பிட்டாலே அதிகாரிகளின் நேர்மை தெரியவரும். இந்த அலுவலகத்தில் செய்த தவறு வெளியே தெரிந்ததும் வளமான சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணிமாறுதல் பெற்றுள்ளாராம் இளங்கோ என்கிற அதிகாரி.
வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் தங்களுக்கு வரும் புகார்களை நேர்மையாக விசாரணை நடத்தாமல் இனிமேல் சரியாக செயல்பட வேண்டும் என்கிற ரீதியில் மேம்போக்காக விசாரணை செய்வதால் தவறு செய்தவர்கள் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் மீண்டும் தவறு செய்யத்தான் செய்வார்கள்.
தற்போது இதுசம்பந்தமாக வருவாய் நில நிர்வாக ஆணையர் விசாரணை செய்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியினரின் கோரிக்கையாக இருக்கிறது.
– வெற்றி