தனியார் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 நாட்களில் 3 பேர் தற்கொலை
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தொடர்ந்து 3 நாட்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதியான திருவல்லிக்கேணி பகுதியில் மட்டும் 175 தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் குறைந்த வாடகைக்கு அறை கிடைப்பதால், சென்னைக்கு வேலை தேடி வருபவர்கள், தொழில் ரீதியாக வருபவர்கள் இந்த பகுதியில் அதிக அளவில் அறை எடுத்து தங்குகின்றனர்.
திருவல்லிக்கேணி தாசுதி கான் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் உள்ள அறையில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர் தூத்துக்குடியைச் சேர்ந்த மரிய பிரான்சிஸ் பிரபு என்பவர் எனவும், வேலைக்கு நேர்முகத் தேர்வுக்காக வந்து, அன்று முழுவதும் அறையில் மது அருந்திவிட்டு உயிரிழந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டரா என போலீசார் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
இதே போல் சில தினங்களுக்கு முன்பு திருவேல்லிக்கேணி சாகிப் தெருவில் உள்ள தங்கும் விடுதியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜெயன், அவருடைய மனைவி புனிதா மேரி, 6 வயது குழந்தை, கள்ள காதலி சரண்யா உட்பட நான்கு பேர், தங்கும் விடுதி அறையில், கடன் பிரச்சனை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தனர். இதில் ஜெயன் சிகிச்சை பலன் அளிக்கமால் உயிரிழந்தார்.
இதே போல் சவுகார்ப்பேட்டை பகுதியை சேர்ந்த சுமர் சிங், காஜல் ஆகிய இருவரும் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். காலை நீண்ட நேரம் ஆகியும் விடுதியின் அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவல்லிக்கேணி காவல்துறையினர் அறையை திறந்து பார்த்தபோது, இருவரும் விஷம் அருந்திய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுமர் சிங்கை அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காஜலும், சுமர் சிங்கும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து 3 நாட்களில் திருவேல்லிக்கேணி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் 3 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.
இது குறித்து திருவல்லிக்கேணி தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், “அறை எடுத்து தங்குபவர்களின் அடையாள அட்டை உட்பட முழு விபரங்களையும் வாங்கிய பின்னர்தான் தங்குவதற்கு அறை வழங்குவதாகவும், சந்தேகப்படும் வகையில் உள்ளவர்களுக்கு அறை வழங்குவது இல்லை எனவும் தெரிவித்தனர்”. ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த பிரச்னை காரணமாக இது போன்று தங்கும் விடுதிகளில் தற்கொலை செய்து கொள்வதாகவும், இது போன்ற சம்பவங்களை தங்களால் தடுக்க முடியவில்லை எனவும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.