தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாகிறதா எடப்பாடி?
தமிழகத்தில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு பிறகு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைத் கைப்பற்றியராக ஜெயலலிதா புகழப்பட்டார். அப்படி தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஜெயலலிதா 72 நாள் சிகிச்சைக்குப் பின்னர் டிச.5 ஆம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு பிறகு கட்சியிலும் ஆட்சியிலும் ஏற்பட்ட மாற்றங்கள், ஆட்சி நிலைக்குமா? கட்சி பிளவுபடாமல் இருக்குமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. அப்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகவும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றபோது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தர்மயுத்தம் தொடங்கினார்.
கட்சியில் ஏற்பட்ட இந்த பிளவு பெறும் சர்ச்சையை ஏற்படுத்திய சூழலில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட முதலமைச்சர் பதவி எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்தது. 2017 பிப்ரவரி 16 ஆம் தேதி முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். நீட்தேர்வு பற்றிய பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனை, அமைச்சர்களின் உளரல் பேச்சுக்கள், எட்டுவழிச்சாலை போன்ற பிரச்சனைகள் பற்றிய விமர்சனங்களுக்கு மத்தியில் குடிமராமத்துப் பணிகள், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு போன்ற பல அதிரடி திட்டங்களுடன் முதலமைச்சராக மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து தனது சொந்த ஊரான எடப்பாடியை தலைநகரமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க இருக்கிறது எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு. அவ்வாறு புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் எடப்பாடி மாவட்டம் தான் இனி தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் என்றும் அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள்.
எடப்பாடி புதிய மாவட்டத்திற்கான புதிய அறிவிப்பும், தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் என்ற அறிவிப்பும் விரைவில் தமிழக அரசின் அரசாணையில் வெளியிட இருக்கிறார்கள். அதற்கான ஆய்வுப் பணிகளும், ஆலோசனை கூட்டங்களும் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
& சூரிகா