ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பியின் பாலியல் புகார்
சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த விசாகா கமிட்டி பரிந்துரை
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பியின் பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக இருக்கும் அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததும் இது குறித்துப் பலவேறு கட்டங்களில் தவிர்த்து, விலகி, எச்சரித்து, ஒதுங்கிச் சென்றும் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்ததை அடுத்து அந்தப் பெண் அதிகாரி தற்போது வெளியில் துணிச்சலாக வந்து புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு- 1-ம் தேதி மேலதிகாரி உச்சகட்டமாக பாலியல் தொல்லை கொடுக்க, இனியும் பொறுத்தால் சரியல்ல என்று அந்தப் பெண் அதிகாரி ஆகஸ்டு 4-ம் தேதி அன்று முதல்வரின் அலுவலகம், டிஜிபி, உள்துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு மேலதிகாரி மீது புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையே திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கவனத்திற்கு இந்த விவகாரம் வர, காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டால் அதை விசாரிக்கும் விசாகா கமிட்டி ஏன் செயல்படவில்லை என்று அதிர்ச்சியுடன் கருத்து தெரிவிக்க, அது பரபரப்பாக ஊடகங்களில் செய்தியானது.
இந்நிலையில் அரசு விசாகா கமிட்டியை அமைத்தது. விசாகா கமிட்டியின் தலைவராக மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி சீமா அகர்வாலும், உறுப்பினர்களாக போக்குவரத்துக் கழக ஏடிஜிபி சு.அருணாச்சலம், காஞ்சிபுர சரக டிஐஜி தேன்மொழி, டிஜிபி அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் மற்றும் வெளியிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினராக ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி அன்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தலைமையில் விசாகா கமிட்டி கூட்டம் டிஜிபி அலுவலகத்தில் நடந்தது. இதில் விசாகா கமிட்டி தலைவர் சீமா அகர்வால் உட்பட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புகாருக்கு உள்ளான நபரும், புகார் கூறியவரும் ஐபிஎஸ் அந்தஸ்து அதிகாரிகள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய சட்டமுறைகள் குறித்தும், இருவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் புகாரை விசாரித்த விசாகா கமிட்டி ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தின் தன்மை அடிப்படையில் புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்துள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதாலும், மின்னஞ்சல், வாட்ஸ் அப், கண்காணிப்பு கேமரா என பல ஆதாரங்கள் சைபர் பிரிவு மூலம் விசாரணை நடத்தவேண்டி இருப்பதாலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி விசாகா கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
சிபிசிஐடிக்கு விசாகா கமிட்டி பரிந்துரைத்தாலும், தமிழக அரசு இதற்காக முறையாக உத்தரவிட வேண்டும். அதன்பின்னர் விசாரணை காலம் உள்ளிட்டவை நிர்ணயிக்கப்படும்.