புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்வு! : மின்வாரியம் திட்டம்
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத் தொகையை பல மடங்கு உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கு நுகர்வோரிடம் இருந்து மின்சார வாரியத்தால் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. 2004-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த மின் இணைப்புக்கான கட்டணத் தொகையை உயர்த்தும்படி மின்சார வாரியம் சார்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, சென்னை போன்ற பெருநகரங்களில் புதைவட மின் கம்பி மூலம் சேவையை பெற விரும்புவோருக்கு கட்டணத் தொகை பல மடங்கு உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தேசித்துள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டின் உரிமையாளர்கள் ஒரு முனை மின்சார இணைப்பை பெற விரும்பினால் தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின்படி 1,600 ரூபாய் செலுத்துவதற்கு பதிலாக 26,200 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இரண்டு அல்லது மூன்று படுக்கையறை கொண்ட நடுத்தர குடும்பத்தினர் 5 கிலோ வாட் மும்முனை மின்சார இணைப்பை பெறுவதற்கு 7,450 ரூபாய் வைப்பு தொகை செலுத்தி வரும் நிலையில், அதனை 49,0 60 ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
10 கிலோ வாட் திறன் கொண்ட மும்முனை மின் இணைப்பை பெற விரும்பும் சொகுசு பங்களாக்கள், வணிக வளாகங்கள் என்றால் 10,450 ரூபாய்க்கு பதிலாக 94,060 ரூபாயை வைப்பு தொகையையாக செலுத்த வேண்டியிருக்கும். இதேபோன்று நகராட்சி, பேரூராட்சி, கிராம நிர்வாகத்தின் கீழ் மின்கம்பங்கள் மூலம் மின் சேவை பெறுபவர்களுக்கும் கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி, கிராமத்தில் ஒற்றை படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிற்கு 3 கிலோவாட் திறன் கொண்ட ஒரு முனை மின் இணைப்பை பெற 1,600 ரூபாய் வைப்பு தொகையாக செலுத்தி வரும் நிலையில், அதனை 6,600 ரூபாயக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டிற்கு 5 கிலோவாட் மும்முனை மின் இணைப்பை பெற இதுவரை 7,450 ரூபாய் வைப்பு தொகையாக செலுத்தி வருபவர்கள் இனி 23,060 ரூபாயக உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கையறை கொண்ட சொகுசு வீடு அல்லது வணிக வளாகங்களுக்கு 10,450 ரூபாய்க்கு பதிலாக 40,200 ரூபாயாக வைப்புத் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
நஷ்டத்தில் இயங்கி வரும் மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சுமையை ஒரேயடியாக பொதுமக்கள் மீது சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.
& நமது நிருபர்