பதவி உயர்வுக்காக ஊழியர்களிடம் தலா ரூ.5 லட்சம் லஞ்சம் : போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்
துணை போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ரூ.5 லட்சம் வீதம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சென்னை நகர சிறப்பு பிரிவு-3 ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் துணை ஆய்வுக்குழு அலுவலர்களுடன் இணைந்து சென்னை எழிலகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையில் முதல் கட்டமாக 35 லட்ச ரூபாய் ரொக்கம் பிடிபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல லட்சம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் நடராஜன் இல்லம் அமைந்துள்ள வளசரவாக்கத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அவருடைய அரசு வாகனத்திலும் சோதனையிட்ட அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தும் பொழுது மகிழ்ச்சியுற்ற சில ஊழியர்கள் அலுவலகத்தின் வாசலில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.