சினிமா

பணி செய்ய விடாமல் தடுக்கிறதா ஒளிப்பதிவாளர்கள் சங்கம்..?

சினிமா தொழிலாளர்கள் சங்கங்களில் சமீபகாலமாக பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் ஒரு சிலர் உறுப்பினர்கள் நம்மை மதிக்க வேண்டும், எதிர்த்து கேள்வி கேட்டால் அவர்களை சங்கத்தை விட்டு நீக்குவது என தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. சங்கங்களின் நிர்வாகிகள் தங்கள் கடமையை சரியாக செய்தால் உறுப்பினர்கள் ஏன் கேள்வி கேட்கப் போகிறார்கள். சங்கங்கள் என்றால் சண்டை இல்லாமல் இருக்குமா?

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப் பட்ட தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தினர், தமிழ்நாடு திரைப்பட மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பணிபுரியும் படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று பெப்சியில் இணைக்கப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் மட்டும்தான் பணிபுரிய வேண்டும். மற்றவர்கள் பணிபுரிய கூடாது என்று படப்பிடிப்பு தளங்களில் வேலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்துவதாக தொழிலாளர் நல ஆணையத்தில் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் புகார் அளித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நல ஆணையர் இருதரப்பினரையும் விசாரணைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்த பேச்சு வார்த்தையின் போது தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தொழிலாளர் நல ஆணையரிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில் தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளாகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை தடுப்பதாக தெரிவித்த புகாரில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் அவ்வாறு பணியாற்றிய எவரையும் சங்க நிர்வாகிகள் தடுத்து நிறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறுகையில், தொழிற் சங்க சட்டத்தின்படி முறையாக பதிவு செய்யப்பட்டு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவுத் துறையில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கம் என்றும் எங்களது உறுப்பினர்களுக்கு பணியாற்றும உரிமையை தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இருதரப்பினர் கருத்துக்களையும் கேட்டறிந்த தொழிலாளர் நல ஆணையர் ஒரு தொழிற்சங்கம் மற்றொரு தொழிற்சங்கத்தின் நோக்கத்திற்கும் அல்லது உறுப்பினர்களின் பணி உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயலாற்றிட வேண்டும் என இருதரப்பினரையும் அறிவுறுத்தி கடிதத்தில் இரண்டு தரப்பினரையும் கையொப்பமிட வைத்து மேற்கண்ட நிகழ்வுகளை கடிதமாகவும் வழங்கியுள்ளார்.

ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர்கள் தங்களது சங்கத்தின் நிர்வாகிகளின் ஈகோவால் இன்று இரண்டு சங்கங்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு தங்களது நிம்மதியை இழந்து தவிக்கிறார்கள். இன்று ஒளிப்பதிவாளர்கள் சங்கம் இரண்டாக பிரிந்து செயல்படுகிறது. இதேபோல் நாளை ஒரு சங்கம், நாளை மறுநாள் ஒரு சங்கம் என புதிது புதிதாக நிர்வாகிகளின் தவறான அணுகுமுறையால் பல சங்கங்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சில சங்கங்களில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து நிர்வாகிகளாக இருப்பதால் அந்த நிர்வாகிகள் மீது உறுப்பினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு வேலைக்கு போகாமல் சங்கத்தின் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்தும் நிர்வாகிகளை கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சுயவிருப்பு வெறுப்புகளை மறந்து நேர்மையாக தங்கள் கடமையை செய்தால் எந்தப் பிரச்சனையும் வராது. சங்கத்தில் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் யாரும் சங்கத்தில் பேட்டா எடுக்கக் கூடாது என்று பொதுக்குழுவில் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வந்தால் சிலருக்கு உழைத்து சாப்பிடும் எண்ணம் வரும். வேலை செய்ய இயலாத மூத்த உறுப்பினர்களை சங்கத்தின் நிர்வாகிகளாக உறுப்பினர்கள் தேர்வு செய்ய முன்வரவேண்டும். இதெல்லாம் நீதி, நேர்மை பேசும் நிர்வாகிகளுக்கு புரிந்தால் சரி என்கிறார்கள் சினிமா தொழிலாளாகள்.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button