தினம் 20ஆயிரம் ரூபாய் லஞ்ச வசூல்… விஏஓ மீது நடவடிக்கை எடுக்கப்படுமா..?
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட தாராபடவேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பவிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமானால் பணம் கொடுத்தால் மட்டும் தான் வி.ஏ.ஓ பவிதா வேலையை முடித்துக் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஏற்கனவே இவர் காலாம்பட்டு, திருவலம், கலசமங்கலம், தாராபடவேடு ஆகிய ஊர்களில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய போது லஞ்சம் வாங்கியதாக புகார்கள் இருப்பதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதுசம்பந்தமாக விஏஓ பவிதா பற்றி ஏற்கனவே பணியாற்றிய பகுதிகளில் விசாரித்த போது இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் அப்பகுதியினர். இவரிடம் பட்டா மாறுதல், கன்டிசன் பட்டாவை அயன்பட்டாவாக மாறுதல் செய்ய, பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய, வாரிசு சான்றிதழ் பெற, பட்டா நிலம் அளவீடு செய்ய, அடங்கல், சிட்டா என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக கணிசமான தொகையை நிர்ணயித்து அவற்றை கொடுத்தால் மட்டுமே வேலையை முடித்துக் கொடுப்பாராம். இதேபோல் சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்றுகளுக்கு கட்டாயம் 500 ரூபாய் என நிர்ணயம் செய்து வசூலித்ததாகவும், தினசரி 20 ஆயிரம் ரூபாய் வசூல் இல்லாமல் வீட்டிற்குச் செல்லமாட்டார் என்கிறார்கள்.
மேற்கண்ட பணிகளுக்காக வசூல் செய்யும் பணத்தை வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் வரை பிரித்துக் கொடுத்து வேலையை முடித்துக் கொடுக்கும் இடைத்தரகராகவும் செயல்படுகிறாராம். தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கி சிறை சென்றவர்கள் ஏராளம். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமல்லவாடி வருவாய் ஆய்வாளர் ஷாஜியா பேகம் முதியோர் உதவித்தொகை பெற பரிந்துரை செய்வதற்கு 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது. அதேபோல் காங்கேயம் வட்டாட்சியர் சிவகாமி 60 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினார்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் குமளம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றுள்ளார். அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பெண் அலுவலர்கள் தான் சமீபகாலங்களில் லஞ்சப் புகாரில் அதிகம் சிக்கி இருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்திற்கு உட்பட்ட தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவிதா மீது ஏராளமான புகார் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், வருவாய் அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– நமது நிருபர்