மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம் – இரவு நேரத்தில் பெண்களை சிறைப்பிடித்து மிரட்டி வசூல் செய்த கொடுமை.!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் அருள்புரத்தில் இரவு நேரத்தில் பெண்களை மிரட்டி சிறைபிடித்து பணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் 13 பெண்கள் குழுவாக அபிராமிநகரில் செயல்பட்டுவரும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குழுவில் இருந்த ஒருவர் இறந்துவிட்டார். மேலும் இருவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டனர். இதனிடையே மாதத்தவணை கட்ட இருவர் காலதாமதம் செய்யவே மாலை சுமார் 5.00 மணிக்கு செந்தூரான் காலனிக்கு வந்த மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் தவணை செலுத்த வந்த பெண்களை சிறைபிடித்து கடன் தவணை செலுத்தாத இருவரின் பணத்தையும் செலுத்த கூறி மிரட்டியுள்ளனர். இருப்பினும் குடிபெயர்ந்த இருவரும் தவணை தொகையை செலுத்திவிடுவதாக போனில் தகவல் தெரிவித்தும் ஏற்காத ஊழியர்கள் சுமார் 4 மணி நேரம் பெண்களை சிறைபிடித்து மிரட்டிவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெண்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து சம்பவ இடத்திற்கு வார்டு உறுப்பினர் மற்றும் கரைப்புதூர் ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களை மீட்டு அங்கிருந்த ஊழியர்களை பிடித்து விசாரித்தனர். மேலும் பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கிருந்தவர்களின் சமாதானத்தை எதுவும் ஏற்காமல் அடாவடித்தனமாக இரவு வீதியில் செல்போன் வெளிச்சத்தில் பணத்தை வசூலித்தனர்.
மேலும் ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி நடக்காமல் இரவு நேரத்தில் பெண்களை சிறைபிடித்தும் மிரட்டியும் கந்துவட்டி வசூலிப்பதை போன்ற செயலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பெண்களுக்கென மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் வேளையில் இது போன்று அறியாமை காரணமாக தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெற்று பெண்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர். மேலும் ஆதார் கார்டை தடை செய்துவிடுவதாக மிரட்டியே வசூலில் ஈடுபட்டுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.