தகவல் கேட்டு மனு கொடுத்தால் லஞ்சம் கொடுத்து சமரசம் பேசும் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய செயலர்கள்
மக்களால் அரசு… மக்களுக்காக அரசு… மக்கள் தங்களுக்கு தேவைப்படும் சலுகைகளையும், தேவைகளையும் மனுக்கள் மூலம் அரசாங்கத்திற்கு தெரியப்படுவது வழக்கம். அவ்வாறு தெரியப்படுத்தும் போது அந்த மனுக்கள் மீது இரண்டு வகையான நடவடிக்கைகள் இருக்கும். ஒன்று அந்த மனு மீதான நடவடிக்கை எடுப்பார்கள். இரண்டு மனுவை நிராகரிப்பார்கள். மூன்றாவதாக ஒரு நடவடிக்கை இருக்கிறது அது என்ன தெரியுமா? மனு அல்லது தகவல் கோருவோரை அழைத்து மாமியார் வீட்டில் மருமகனுக்கு விருந்து அளிப்பதை போன்ற கவனிப்பு. இந்த மூன்றாவது முறை திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பிரபலம்.
பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, வள்ளபுரம், தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், இடுவாய், மங்கலம், முதலிபாளையம் ஆகிய 13 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியதுதான் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம். இந்த திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை பொருத்தவரை புகாரோ தகவலோ கேட்டு மனு அளித்தால் அவர்கள் மனுதாரரை கையாளும் விதமே தனி. அப்படி திருப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் தகவல் அல்லது மனு அளித்தால் மனுக்களுக்கு உண்டான நடவடிக்கை அல்லது பதிலுக்கு பதிலாக இந்த 13 ஒன்றியத்தில் ஏதோ ஒரு ஊராட்சியில் ஊராட்சி செயலர் மனுதாரரை அழைத்து சமரசம் பேசுவார்.
சம்பந்தப்பட்ட மனு ஒன்றுக்கு மேற்பட்ட ஊராட்சியின் தொடர்புடையதாக இருப்பின் மொத்தமாக ஒருவரே பேசி முடிப்பார். பேசி முடிப்பது என்றால் என்ன செட்டில்மெண்ட் தான். ஒரு உதாரணத்திற்கு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5 கிராம ஊராட்சிகள் சம்பந்தமாக தகவல் கேட்டுள்ளோம் என்று வைத்துக்கொள்ளலாம். அது ஐந்து ஊராட்சி சார்பில் ஏதேனும் ஒரு ஊராட்சி செயலர் வந்து மனுதாரரை அணுகுவார். அவ்வாறு அணுகி எதற்கு இதெல்லாம் கேட்கிறீர்கள்.. தகவல் எல்லாம் உங்களுக்கு எதற்கு.. வேறு என்ன வேணுமோ கூச்சப்படாமல் கேளுங்கள் என்பார்கள். இவ்வாறு பேச ஆரம்பிக்கும் போது ஊராட்சி செயலர்.. ஒரு ஊராட்சிக்கு குறிப்பிட்ட தொகை என்று கணக்கிட்டு 5 ஊராட்சிக்கு ஒரு தொகையை மனுதாரரிடம் பேசி முடிப்பார். பொதுவாக கடந்த ஜனவரி மாதத்திற்கு முன் தனி அலுவலர் காலகட்டத்தில் இருக்கும் தகவலை கோரினால். ஒரு ஊராட்சிக்கு 10000 ரூபாய் வீதம் ஐந்து ஊராட்சியின் தகவலை கேட்டு மனு அளித்தால் 5 x 10000 = 50000… ஒரே மனுவில் ஒரு மாத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பளத்தை பெற்றுவிடலாம்.
இதில் அவர்கள் விதவிதமான ஆபர்கள் வேறு சொல்கிறார்கள். ஏற்கனவே இப்படி ஒருத்தர் மனு அளித்தார் அவருக்கு ஒரு ஊராட்சிக்கு ரூபாய் 5000 கொடுத்தோம். நீங்கள் கூடுதல் தகவல் கேட்டுள்ளீர்கள் உங்களுக்கு பத்தாயிரம் தருகிறோம். இல்லை உங்களது மனு சரியில்லை 2000 மட்டுமே தருவோம். என்று மனுவில் கோரப்பட்ட தகவல் மற்றும் புகார் அடிப்படையில் ஊராட்சி வாரியாக கொடுக்கப்படும் தொகைகள் மாறுபடும். கிராம ஊராட்சியின் வரவு செலவை பற்றி கேள்வி கேட்டால் ரூபாய் 10000க்கு குறையாது. இப்படி இந்த ஊராட்சி செயலர்கள் நடந்து கொள்வதற்குக் காரணம் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் தான்.அவர்தான் எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது எதுவாக இருந்தாலும் பேசி முடித்துக் கொள்ளுங்கள் என்று ஊராட்சி செயலர்களுக்கும் மனுதாரருக்கு இடையே கட்டப்பஞ்சாயத்தும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து சமரசம் செய்து வைப்பவர்.
ஒரு ஊராட்சிக்கு ஒரு மனுதாரருக்கு பத்தாயிரம் என்றால் எத்தனை பேர் கேள்வி கேட்டு இருப்பார்கள் எத்தனை பத்தாயிரம் இவர்கள் கொடுத்திருப்பார்கள். அப்போ தனி அலுவலர் காலகட்டத்தில் ஊராட்சி செயலர்கள் சுருட்டியது என்ன? துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கொடுப்பது எவ்வளவு? வட்டார வளர்ச்சி அலுவலரின் பங்கு என்ன? திட்ட இயக்குனர்களின் கமிஷன் எவ்வளவு? என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.காசு கொடுத்து விட்டால் எதையும் செய்து விடலாம் என்று திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் போல் தமிழ்நாடு முழுவதும் பல ஊராட்சி ஒன்றியங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படிப்பட்ட செயல்கள் பல மனுக்களுக்கும் பல புகார்களும் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த வண்ணம் உள்ளது. ஏன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய கார்த்திகேயன் ஐந்து ஊராட்சிகளில் வரவு செலவு கணக்கைக் கேட்டு திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு மனு அளித்தால். அந்த ஐந்து ஊராட்சியின் ஏதேனும் ஒரு ஊராட்சி செயலர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனை தொடர்புகொண்டு டீலிங் பேசினாலும் பேசலாம். மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் இதனை முயற்சி செய்து பார்த்தால் உண்மை நிலை புரியும்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வரப்பெற்ற புகார் மனுக்க ளையும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களையும் ஆய்வு செய்தாலே போதும். எத்தனை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை மனுக்களுக்கு பதில் கொடுக்கப்பட்டுள்ளது? எத்தனை மனுக்களுக்கு பதில் கொடுக்கப்படவில்லை. பதில் கொடுக்கப்படாமல் முடிக்கப்பட்ட கோப்புகள் எவை என்று நன்கு ஆராய்ந்தால் இத்தகைய மோசடியில் ஈடுபட்டு இருக்கும் ஊராட்சி செயலர்கள் யார்? யார்? வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யார்? யார்? துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யார்? என்பது மாவட்ட ஆட்சியருக்கு நன்கு விளங்கும். இப்படி பணம் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு சுற்றித்திரியும் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி செயலர்களை என்ன செய்யப்போகிறார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்…
–முத்துப்பாண்டி