தமிழகம்

சர்வதேச தரத்தில் வசதிகள்: ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் ரிப்பன் மாளிகை எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில் நிலையத்தில் ரெயில்கள் வந்து செல்ல மட்டும் 2 அடுக்குகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
சென்டிரல்-பரங்கிமலை செல்லும் ரெயில்கள் முதல் அடுக்கிலும்(2-வது தளம்), வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் செல்லும் ரெயில்கள் 2-வது அடுக்கிலும்(3-வது தளம்) வந்து செல்கின்றன. தரை தளத்தில் இருந்து 60 அடி ஆழம் மற்றும் 100 அடி ஆழத்தில் இவை ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கப்பட்டு உள்ளன. இதுபோக அவற்றுக்கு மேல் முதல் தளத்தில் டிக்கெட் கவுண்ட்டர்களும் உள்ளன.
சுரங்க ரெயில் நிலையங்கள் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டு உள்ளதுடன், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரைகள், அலங்கார விளக்குகள், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 15 லிப்ட்டுகள், நகரும் படிக்கட்டுகள், நவீன வசதிகளுடன் கூடிய 14 டிக்கெட் கவுண்ட்டர்கள், தானியங்கி டிக்கெட் எந்திரங்கள், நவீன கழிப்பிடங்கள், பயணிகள் ஓய்வு அறைகள், அதிகாரிகளுக்கான அறைகள் போன்றவை நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக அமைக்கப்பட்டு உள்ளது. பார்வையற்றோர் வந்து செல்வதற்காக தனி பாதையும் உருவாக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், பயணிகளுக்கான அறிவிப்பு பலகைகள், ஒலிபெருக்கிகள், பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் சர்வதேச தரத்தில் செய்து தரப்பட்டு உள்ளது. அத்துடன் பயணிகளின் உதவிக்காக கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ரெயில் நிலையத்தில் உணவு கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
சென்டிரல் சுரங்க ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு ரெயில்வே தலைமையகம், பூங்கா மற்றும் பூங்கா நகர் ரெயில் நிலையங்கள், ரிப்பன் மாளிகை, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்கு செல்லும் வகையில் 5 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதனால் பயணிகள் எளிதாக ரெயில் நிலையத்தை சென்றடைய முடியும். பயணிகள் எளிதாக சாலையை கடக்க வசதியாக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக நவீன வசதிகளுடன் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த ரெயில் நிலையத்துக்கு சுமார் 1 லட்சம் பயணிகள் வந்து செல்லலாம். 500 கார்கள் மற்றும் ஆயிரம் மோட்டார்சைக்கிள்கள் நிறுத்துவதற்கும் ‘பார்க்கிங்’ வசதி உள்ளது. விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகளுக்காக தனியாக விமான நிலையத்தில் இருக்கும் நடைமுறைகளை (செக்-இன்) செயல்படுத்தும் மையம் போன்ற வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது.
சுரங்க ரெயில் நிலையத்துக்கு மேலே மாநகர பஸ்கள் நிறுத்தமும் உள்ளது. ரெயில் நிலையத்துக்கு தேவையான மின்சாரம் வழங்குவதற்கு தனியாக துணை மின் நிலையம் மற்றும் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிவறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
லண்டன், நியூயார்க், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள மெட்ரோ ரெயில் நிலைய வசதிகளை பார்வையிட்டு அதே போன்று சென்டிரல் ரெயில் நிலையத்திலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் ஆசியாவிலேயே பெரிய சுரங்க ரெயில் நிலையம் என்றும் பெயர் பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button