தமிழகம்

கள்ளச்சாராய தடுப்பு சட்டத்திலிருந்து, பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு..!

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் பனைத் தொழிலாளர்களிடையே ஆலோசனைக் கூட்டங்கள் திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நிறைவு பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்துகொண்டு, தொழிலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர், அவர் கூறுகையில்.. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின், எனக்கு நலவாரிய தலைவர் பொறுப்பை வழங்கினார். இதுவரை 15 ஆயிரம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது பதநீர் சீசன் தொடங்கி இருக்கிறது. பனைத்தொழிலாளர்கள் காலையில் பதநீரை இறக்கி விற்பனை செய்வதோடு, கருப்பட்டி தயாரிக்கின்றனர். மீதமுள்ள பதநீர் மாலையில் புளித்து கள்ளாக மாறிவிடுகிறது.

இதனால் கள்ளச்சாராய தடுப்பு சட்டத்தில் பனை தொழிலாளர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 15 பேர் சிறையில் இருக்கின்றனர். இதன் காரணமாக பனைத் தொழிலாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். கள்ளச்சாராய தடுப்புச் சட்டத்திலிருந்து பனைத் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். இதற்காக மாவட்டந்தோறும் சென்று தொழிலாளர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறேன் என்று கூறினார்.

பின்னர் பனைமர தொழிலாளர்களுக்கு உபகரணங்களை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, தொழிற்சங்கச் செயலர் ஜெபராஜ் டேவிட், தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை  தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் கிராம நிர்வாகிகள் உறவின்முறை தலைவர்கள் பொதுமக்கள் பனைமர தொழிலாளர்கள் திரளாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button